நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்த முதல் செய்தி.

6நேற்று மாலை இந்தியாவின் 15வது பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு தனது முதல் செய்தியை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக இணையதளத்தில் இந்த செய்தி வெளிவந்துள்ளது. தான் இந்த நாட்டின் பிரதமராக இருந்தாலும் சாமானிய மனிதர்களும் தன்னை இணையதளம் மூலம் எந்நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார். பிரதமர் நாட்டு மக்களுக்கு விடுத்த் செய்தி இதோ:
 எனது சக இந்திய மக்களுக்கும், உலகக் குடிமக்களுக்கும் எனது வணக்கம். பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். 2014, மே மாதம் 16-ம் தேதி இந்திய மக்கள் மிகப்பெரிய தீர்ப்பை அளித்தனர்.
 
வளர்ச்சிக்காகவும், நல்லாட்சிக்காகவும், ஸ்திரத்தன்மைக்கும் அவர்கள் வாக்களித்னர். இந்தியாவை வளர்ச்சிப் பாதையிலும், புதிய உயரத்திற்கும் எடுத்துச் செல்ல உங்களுடைய ஆதரவும், ஆசிர்வாதமும், உள்ளார்ந்த பங்களிப்பும் முக்கியம், அவசியம். நாம் அனைவரும் இணைந்து வளமை வாய்ந்த எதிர்கால இந்தியாவை கட்டியமைப்போம். அனைவரும் சேர்ந்து வலுவான, வளர்ச்சி அடைந்த, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்க கனவு காண்போம்.
 
உலக சமுதாயத்துடன் இணைந்து உலக அமைதிக்காகவும், வளர்ச்சிக்காகவும் உழைக்கும் சமுதாயமாக மாற்றியமைப்போம். மக்களுக்கும், எனக்கும் இடையிலான நேரடியான தகவல் தொடர்பு மீடியமாக இந்த இணையதளத்தை நான் சமர்ப்பிக்கிறேன். தொழில்நுட்பத்தின் சக்தி மீதும், சமூக மீடியாக்கள் மீதும் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். உலகம் முழுவதும் உள்ள மக்களை ஒருங்கிணைக்கும் சக்தி இதுதான்.
 
இந்த மேடை மூலம் மக்களின் கருத்துக்களை அறிந்து, தெளிந்து செயல்பட உதவியாக இருக்கும். இந்த இணையதளத்தின் மூலம் எனது பேச்சுக்கள், திட்டங்கள், வெளிநாட்டு பயணங்கள் மற்றும் பிற தகவல்களை மக்கள் நேரடியாக காண முடியும். இதில் எனது திட்டங்களை தொடர்ந்து நான் தெரிவித்த வண்ணம் இருப்பேன்.
 
இப்படிக்கு,
நரேந்திர மோடி

Leave a Reply