இலங்கை அதிபர் ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று விரைவில் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செய்வார் என கூறப்படுகிறது.
மோடி பதவியேற்பு விழாவுக்கு இந்தியாவுக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, நேற்று பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் தமிழக, இலங்கை மீனவர்களின் பிரச்சனை குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. இரு தரப்பு மீனவர்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு உறுதுணைபுரிவது என மோடியும் ராஜபக்சேவும் ஒப்புக்கொண்டனர். மேலும் இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் குறித்தும் விரிவாக இந்த பேச்சுவார்த்தையில் அலசப்பட்டது.
இதையடுத்து இலங்கை வருமாறு ராஜபக்சே விடுத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டதாகவும், விரைவில் பிரதமரின் இலங்கை சுற்றுப்பயணம் குறித்து திட்டம் தயாரிக்கப்படும் என்ரும் வெளியுறவு செயலர் சுஜாதா சிங் தெரிவித்தார்.
ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக கட்சிகள், மோடி இலங்கை செல்வதை எப்படி எடுத்துக்கொள்ளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.