பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு மனைவி மற்றும் மச்சானுடன் டெல்லி சென்ற விஜயகாந்த், பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளாமல் ஓட்டல் அறையிலேயே தங்கியிருந்தது ஏன் என்ற காரணங்கள் தற்போது வெளிவந்துள்ளன.
பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு விஜயகாந்த்துக்கு முறைப்படி அழைப்பு வந்ததால், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதோடு, தன்னுடைய மனைவி அல்லது மச்சானுக்கு ஒரு ராஜ்ய சபா எம்.பியும் மந்திரி பதவியும் கேட்டு வாங்கிவிடலாம் என்ற நப்பாசையுடன் விஜயகாந்த் தனது குடும்பத்தினர்களுடன் டெல்லி சென்றார்.
ஆனால் அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைச்சரவை பட்டியலில் தேமுதிகவுக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. மேலும் ராஜ்ய சபா எம்.பி குறித்து பேசுவதற்கு இது நேரமில்லை என்று பாஜகவினர் கறாராக சொல்லிவிட்டனர்.
மேலும் பதவியேற்பு விழாவில் விஜயகாந்த்துக்கு பின்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்ததாக கேள்விப்பட்ட விஜயகாந்த், பதவியேற்பு விழாவை புறக்கணித்து டெல்லி ஓட்டலிலேயே தங்கியிருந்தார்.
இன்று அல்லது நாளை மோடியை நேரில் சந்தித்து தனது அமைச்சர் பதவி கோரிக்கையை வலியுறுத்த விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக தரப்பில் இப்போதைக்கு தேமுதிகவிற்கு எவ்வித அமைச்சர் பதவியும் கிடைக்காது என்றும் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது தேமுதிகவிற்கு அமைச்சர் பதவி கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜயகாந்த் கடும் அதிருப்தியில் உள்ளார்.
இந்நிலையில் விஜயகாந்த்துக்கு கண்வலி உள்ளதால் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்பட்ட சப்பையான காரணத்தை அவரது கட்சியினர்களே கேலி செய்து வருகின்றனர்.