உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று பெல்ஜியம் அணியுடன் மோதுகிறது.
நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் இன்று முதல் உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடர் ஆரம்பமாகிறது. இந்த போட்டியில். மொத்தம் 12 நாட்டு அணிகள் இரு பிரிவுகளாக மோதுகின்றன.
இந்திய அணி இம்முறை ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது. 1975ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்ற பின்னர் இந்திய அணி இதுவரை அரையிறுதிக்கு கூட தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை சர்தாரா சிங் தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது. இந்த ஆண்டு இந்திய ஹாக்கி அணி உலகக்கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய அணியின் உயர் செயல்பாட்டுக்கான இயக்குனர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ், ‘நாம் கடினமான பிரிவில் இடம் பெற்றுள்ளோம். போட்டிகள் எத்தனை சவாலாக இருக்கும் என்பதை வீரர்கள் அனைவரும் உணர்ந்துள்ளனர். சிறப்பாக விளையாடி வெற்றிகளைக் குவிக்க முடியும் என நம்புகிறோம்’ என்று கூறியுள்ளார்.
ஏ பிரிவில் உள்ள அணிகள் விபரம்:
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா, ஸ்பெயின்
பி பிரிவில் உள்ள அணிகள் விபரம்:
ஜெர்மனி, நெதர்லாந்து, நியூசிலாந்து, தென் கொரியா, அர்ஜென்டினா, தென் ஆப்ரிக்கா
ஜூன் 10 தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் 13ம் தேதியும், இறுதிப் போட்டி ஜூன் 15ம் தேதியும் நடைபெற உள்ளது.