உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா ஜூன் 12ல் துவக்கம்.

football 1உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 20-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை பிரேசிலில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டி தென் அமெரிக்காவில் நடைபெறும் என சர்வதேசகால்பந்து சம்மேளனம் (பிபா) அறிவித்ததால் எவ்வித போட்டியுமின்றி போட்டியை நடத்தும் வாய்ப்பை 2007-ல் பிரேசில் பெற்றது.

சர்வதேச அளவில் அதிகமானோர் பார்த்து ரசிக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை 2-வது முறையாக பிரேசில் நடத்துகிறது. இதற்கு முன்னர் 1950-ல் உலகக் கோப்பை போட்டியை நடத்திய பிரேசில், ஏறக்குறைய 64 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை போட்டியை மீண்டும் நடத்தும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.

footballதென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஆர்ஜென்டீனா 1978-ல் உலகக் கோப்பை போட்டியை நடத்தியது. இப்போது 36 ஆண்டுகளுக்குப் பிறகு 5-வது முறையாக உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு தென் அமெரிக்க கண்டத்துக்கு கிடைத்திருக்கிறது. அக்கண்டத்தை சேர்ந்த முன்னணி அணிகளான ஆர்ஜென்டீனா, பிரேசில், உருகுவே போன்றவை கோப்பையை வெல்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. தென் அமெரிக்க கண்டத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற 4 உலகக் கோப்பை போட்டிகளிலும் அக்கண்டத்தைச் சேர்ந்த அணிகளே வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது

12 மைதானங்கள்

போட்டியை நடத்தும் பிரேசில் மட்டும் உலகக் கோப்பைக்கு நேரடித்தகுதி பெற்றது. நடப்பு சாம்பியன் ஸ்பெயின் உள்ளிட்ட எஞ்சிய 31 அணிகளும் தகுதிச்சுற்றில் விளையாடி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. பிரேசிலில் உள்ள 12 நகரங்களில் புதிதாக கட்டப்பட்ட மற்றும் மறுசீரமைக்கப்பட்ட மைதானங்களில் இந்தப் போட்டி நடைபெறவிருக்கிறது.

போட்டியை நடத்த தகுதியுள்ள மைதானங்களாக 18 மைதானங்களின் பட்டியலை பிபாவிடம் கொடுத்தது பிரேசில். ஆனால் பிபாவோ, ஏதாவது ஒரு நகரத்தில் மட்டுமே இரு மைதானங்களில் போட்டியை நடத்தலாம். 8 முதல் 10 நகரங்களில்தான் போட்டியை நடத்த வேண்டும் என கட்டுப்பாடு விதித்தது.

பிரேசில் கால்பந்து ரசிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு போட்டியை 12 நகரங்களில் நடத்த வேண்டும் என பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ரிக்கார்டோ டெக்ஸீரா கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, 12 நகரங்களில் போட்டியை நடத்த பிபா ஒப்புக்கொண்டது.

அதன்படி பீலேம், கேம்போ கிரான்டி, புளோரியானோபோலிஸ், கோயானியா, ரியோ பிரான்கோ ஆகிய நகரங்கள் போட்டியை நடத்தும் வாய்ப்பை இழந்தன. மெசியோ தானாகவே விலகிக்கொண்டது. பிரேசில் முழுவதும் போட்டியை நடத்தும் வகையில் அங்குள்ள 12 முக்கிய மாகாணங்களின் தலைநகரங்களான ரியோ டி ஜெனிரோ, பிரேசிலியா, சாவோ பாவ்லோ, ஃபோர்ட்டலிசா, பீலோ ஹரிஸாண்டே, சால்வடார், குயாபா, மானாஸ், நேட்டால், கியூரிட்டிபா, ரெசிபே, போர்ட்டோ அலெக்ரே ஆகியவற்றில் போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டியில் பங்கேற்கும் அணிகள் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மைதானத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி

மைதான பணிகளுக்காக மட்டும் சுமார் ரூ.20 ஆயிரத்து 414 கோடி செலவிட்டுள்ளது பிரேசில். உலகக் கோப்பைக்காக 5 மைதானங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள எஸ்டாடியோ நேசியானல் கேரின்சா மைதானம் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டிருக்கிறது. எஞ்சிய 6 மைதானங்களில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரம்மாண்டமான மரக்காணா

ரியோ டி ஜெனிரோவில் உள்ள தி எஸ்டாடியோ டூ மரக்காணா மைதானத்தில்தான் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது. மிகப்பெரிய மைதானமான இதில் ஏற்கெனவே உலகக் கோப்பை இறுதி ஆட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 854 பேர் மைதானத்திற்கு நேரில் வந்து போட்டியை கண்டுகளித்துள்ளனர்.

மொத்தம் 64 ஆட்டங்களைக் கொண்ட இந்த உலகக் கோப்பை போட்டி குரூப் சுற்றோடு ஆரம்பமாகிறது. 1930 முதல் இதுவரை உலகக் கோப்பையை வென்ற அனைத்து அணிகளும் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகை சுமார் ரூ.3390 கோடியாகும். கடந்த உலகக் கோப்பை பரிசுத்தொகையைவிட இது 37 சதவீதம் அதிகமாகும்.

கோல் லைன் தொழில்நுட்பம்

இந்த உலகக் கோப்பை போட்டியில் முதல்முறையாக ‘கோல் லைன்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு கருவியின் மூலம் பந்து கோல் எல்லையை முழுமையாகக் கடந்ததா, இல்லையா என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். ஜிஎல்டி என்றழைக்கப்படும் இந்த ‘கோல் லைன்’ தொழில்நுட்பம், பந்து கோல் எல்லையைக் கடந்ததும் நடுவரின் கையில் அணிந்திருக்கும் கடிகாரத்துக்கு தகவல் தெரிவித்துவிடும்.

2010 உலகக் கோப்பையில் இங்கிலாந்து-ஜெர்மனி அணிகள் இடையிலான காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தின்போது இங்கிலாந்து வீரர் பிராங்க் லேம்பார்டு அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு கோல் லைனுக்குள் விழுந்தபோதும், நடுவரால் சரியாகக் கணிக்கமுடியாததால் அவர் கோல் கொடுக்கவில்லை. இதனால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ‘கோல் லைன்’ தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டது.

பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பிறகு இந்த தொழில் நுட்பத்துக்கு 2012-ல் பிபா ஒப்புதல் வழங்கியது. அதே ஆண்டில் ஜப்பானில் நடைபெற்ற பிபா கிளப் உலகக் கோப்பை போட்டியில் முதல்முறையாக ‘கோல் லைன்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. உலகக் கோப்பையில் முதல்முறையாக பயன்படுத்தப்படவுள்ளது இந்த தொழில்நுட்பம். இதற்காக ‘கோல் கன்ட்ரோல் சிஸ்டம்’ (கோல் கட்டுப்பாட்டு தொழில்நுட்பம்) பிரேசிலில் போட்டி நடைபெறவுள்ள 12 மைதானங்களிலும் பொருத்தப்படவுள்ளது.

71.51 கோடி பேர் கண்டுகளிப்பு

2006-ல் ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி அணி, பிரான்ஸை வீழ்த்தி 4-வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. அந்தப் போட்டியை மட்டும் 71.51 கோடி பேர் கண்டுகளித்தனர். அதுதான் உலகக் கோப்பை வரலாற்றில் அதிகமானோரால் கண்டுகளிக்கப்பட்ட போட்டி.

பிரேசிலிடம் 5 உலகக் கோப்பைகள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 19 உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பை நடைபெறவில்லை.

பிரேசில் அணி அதிகபட்சமாக 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதற்கடுத்தபடியாக இத்தாலி 4 முறையும், ஜெர்மனி 3 முறையும், ஆர்ஜென்டீனா, உருகுவே ஆகியவை தலா 2 முறையும், இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தலா ஒரு முறையும் உலகக் கோப்பையை வென்றுள்ளன. சர்வதேச அளவில் 200-க்கும் அதிகமான நாடுகளில் கால்பந்து போட்டிகள் விளையாடப்பட்டாலும்கூட, உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு 32 அணிகளுக்கு மட்டுமே கிடைக்கின்றன. அதிலும் 8 அணிகள் மட்டுமே இதுவரை உலகக் கோப்பையை வென்றுள்ளன

Leave a Reply