உலகில் உள்ள விமான நிலையங்களில் சிறந்த சேவை செய்யும் விமான நிலையங்கள் எவை என்ற கருத்துக்கணிப்பில் புதுடில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் இரண்டாவது இடத்தை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.
ஏ.சி.ஐ. என்ற சர்வதேச நிறுவனம், உலகில் உள்ள 174 நாடுகளில் உள்ள 1,751 விமான நிலையங்களின் சேவைத்தரம் குறித்த ஒரு சர்வேயை கடந்த சில மாதங்களாக எடுத்து வந்தது. அதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் டெல்லி விமான நிலையம் இரண்டாவது இடத்தையும், மும்பை சத்ரபதி விமான நிலையம் 5வது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த வருட சர்வேயில் புதுடில்லி விமான நிலையம் ஆறாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி டெல்லிய் விமான நிலையம் கடந்த மூன்று வருடங்களாக இந்த சர்வேயில் முதல் பத்து இடங்களில் இடம்பெற்று வருகிறது.
இதுகுறித்து டெல்லி விமான நிலைய சி.இ.ஓ பிரபாகர் ராவ் கூறுகையில், சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தை நமது இந்தியாவை சேர்ந்த ஒரு விமான நிலையம் பெற்றுள்ளது பெருமை அளிக்கிறது என்றும் அடுத்த வருடம் முதலிடத்தை பிடிக்க கடுமையாக முயற்சி செய்வோம் என்றும் கூறியுள்ளார்.