சுகர் இருக்கா… என்ன வேணும்னாலும் சாப்பிடுங்க. கூடவே இந்த சுகர் மாத்திரையைச் சாப்பிட்டா சரியாப்போச்சு.’
‘கர்ப்பத்தைத் தடுக்கணுமா… அதுக்காக எதுக்கு உங்க இன்பத்தை இழக்கணும். சந்தோஷமா இருங்க… கூடவே இந்த மாத்திரையை மறக்காதீங்க!’
– இப்படி எதற்கெடுத்தாலும் மாத்திரைகளை விளம்பரப்படுத்துவதும்… தயக்கமே இல்லாமல் வாங்கி விழுங்குவதும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், பின்விளைவுகளைப் பற்றித்தான் யாருமே யோசிப்பதில்லை.
ஆன்டிபயாடிக்… பெயின் கில்லர்… விட்டமின்… மருந்துகளால் அதிகம் பாதிக்கப்படுவது… குழந்தைகளும் பெண்களும்தான். அந்த பாதிப்புகள் எந்தெந்த வகைகளில் வருகின்றன… அவற்றுக்கான தீர்வுகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
”மாதவிடாய், கருத்தரிப்பதைத் தவிர்க்க, கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் என பெண்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்!” என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு சிறப்பு மருத்துவர் ஹேமலதா, அதைப் பற்றி விரிவாகவே பேசினார்.
”மாதவிடாய் நேரங்களில் சில பெண்களுக்கு 4 முதல் 6 மணி நேரம் வரை வலி ஏற்படும். இது இயற்கையானதுதான். அந்த வலியைப் பொறுத்துக்கொள்ளப் பழகி, அதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதுவே ஒரு சிலருக்கு மாதவிடாய் நாட்களில் நாள் முழுக்க தீவிர வலி இருக்கும். கர்ப்பப்பையின் உள்பகுதியில் உள்ள அணுக்கள் வெளிப்பகுதியில் வளர்வது, இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம். இது மருத்துவரின் ஆலோசனையோடு தீர்க்க வேண்டிய பிரச்னை. அதற்கும் மெடிக்கல் ஷாப்பில் கேட்டு வாங்கி ஏதாவது ஒரு வலிநிவாரணி மாத்திரையை விழுங்கினால், கருப்பையின் வெளிப்பகுதியில் வளரும் அணுக்கள் இன்னும் அதிகமாக வளர்ந்து அதிக வலியைத் தருவதுடன், கருத்தரிப்பில் பிரச்னை வரை கொண்டுசெல்லும்.
சில பெண்கள் மாதவிடாய்க் காலத்தை தள்ளிப்போட மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள். இதுபோன்று மருந்துகளை எடுப்பதால் தலைவலி, உடல் நீர்கோத்தல், உடல் வீக்கம், வாந்தி, பேதி என்று தொடங்கி… வயிற்றுப்புண், மூச்சுவிடுவதில் சிரமம், கிட்னி பாதிப்பு, லிவர் பாதிப்பு என கொஞ்சம் கொஞ்ச மாக பிரச்னைகள் பெரிதாகும். மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரை என்பது, அந்த நேரத்தில் நம் உடலின் ஹார்மோன் செயல்பாட்டை மாற்றிஅமைத்து, நாட்களைத் தள்ளிப்போடும். இப்படி தள்ளிப்போடுவது என்பது, இயற்கைக்கு விரோதமான செயல். இதைச் செய்யவே கூடாது. எப்போதாவது ஒருதடவை தவிர்க்கவே முடியாத ஒரு காரணத்துக்காக, இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வது
சரி. ஆனால், சின்னச் சின்ன காரணங்களுக்காக எல்லாம் அடிக்கடி எடுத்துக்கொண்டால், குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் ஆபத்துகூட உண்டு. கருப்பையை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஏன்… உயிரிழப்பேகூட நிகழலாம்.
கர்ப்ப காலத்தில் மருத்துவரின் பரிந்துரையின்றி பெண்கள் எந்த மாத்திரையையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. தவறான மருந்துகள், கருவைப் பாதிக்கும். குறிப்பாக, கர்ப்பமுற்ற முதல் மூன்று மாதங்களில் ஆன்டிபயாடிக், வலிநிவாரணி போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்வது கரு கலையவும், அடுத்து வரும் மாதங்களில் எடுத்துக்கொள்வது குழந்தை குறைபாட்டோடு பிறக்கவும், கடைசி இரண்டு மாதங்களில் எடுத்துக்கொள்வது குழந்தையின் இதயத்தை பாதிப்படையச் செய்யவும் வாய்ப்புள்ளது. கர்ப்ப காலத்தில் அதிகமாக காபி அருந்துவதுகூட கரு கலைய வாய்ப்பாக அமையலாம் என்கின்றன ஆய்வு முடிவுகள்.
கருத்தடை மாத்திரைகளை, மருத்துவ ஆலோசனையோடு மிகத் துல்லியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் ஏதாவது தவறு ஏற்பட்டால் இதனால் வரும் பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல” என்று எச்சரித்தார் ஹேமலதா.
”குழந்தைகளின் உலகம், மருந்து சூழ் உலகமாகவே மாறிவிட்டது!” என்று வருத்தப்படுகிறார், ஓய்வுபெற்ற குழந்தைகள்நல மருத்துவப் பேராசிரியர் செல்வராஜ். குழந்தைகளின் மருந்து விஷயத்தில் பெற்றோர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட் டினார் அவர்.
”சுயமருத்துவம் பெரியவர்களுக்கு ஏற்படுத்தும் சிக்கல்களைச் சரிசெய்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஆனால், குழந்தைகளின் மருந்து விஷயத்தில் சுயமருத்துவம், தாமதிக்கப்பட்ட சிகிச்சை எல்லாம் உயிரிழப்பு வரை கொண்டு செல்லலாம். பொதுவாக குழந்தைகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படாது. ஒருவேளை கொடுக்க நேரிட்டாலும்… குழந்தையின் பிரச்னையை வைத்து மட்டுமல்ல, அந்த மருந்தின் வீரியத்தை உடல் தாங்குமா என்பதை குழந்தைகளின் வயது, எடை என எல்லா காரணிகளையும் வைத்தே மருத்துவர் முடிவெடுப்பார். ‘அஞ்சு வயசுப் பையன்… காய்ச்சலா இருக்கு, யூரின் மஞ்சளா போகுது…’ என்று மருந்துக் கடைகளில் வாங்கிக் கொடுப்பது… குழந்தைக்கு, அதன் பெற்றோரே எமனாகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்றைக்கு வலிநிவாரணி, விட்டமின் உள்ளிட்ட மருந்துகளையும் பெற்றோர்கள் பரவலாக குழந்தைகளுக்கு வாங்கித் தருகிறார்கள். இது குழந்தைக்கு சளி, காய்ச்சல் என்று பிரச்னைகளை ஆரம்பித்து நுரையீரல், கிட்னி, மூளை என்று பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தி சில சமயங்களில் உயிரிழப்பு வரை அழைத்துச் செல்கிறது.
உடலுக்குத் தேவையான அனைத்துவிதமான விட்டமின்களும் நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவு வகைகளின் மூலமே கிடைக்கின்றன. இதையும் தாண்டி ஒருவருடைய உடலுக்கு விட்டமின் தேவைப்பட்டால்… மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும். முடிந்த வரையில் மருத்துவர்கள் உணவுப் பொருட்கள் மூலமாக நோயாளிக்குத் தேவையான விட்டமின் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். அப்படியும் முடியாதபட்சத்தில் மட்டுமே மருந்துகளை எழுதிக்கொடுக்க வேண்டும். இவற்றையும், மருத்துவரின் பரிந்துரைபடி குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட காலத்துக்கு உட்கொண்டால் பாதிப்பு இருக்காது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமலோ, தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடுத்துக்கொண்டால்… உடலில் தேவையில்லாத பல வளர்ச்சிகளை உண்டாக்கிவிடும். அதனால் பலவிதமான பாதிப்புகள் வரத்தொடங்கிவிடும். உதாரணமாக, அளவுக்கு அதிகமாக வைட்டமின்-ஏ எடுத்துக்கொள்வதால்… தோல் வியாதிகள் தொடங்கி கண் பாதிப்புகள் வரை பல்வேறு விதமான பாதிப்புகள் உண்டாக அதிக வாய்ப்புள்ளது. எனவே, ஒருவர் சத்தான உணவை சரிவர தொடர்ந்து உட்கொண்டாலே போதும்… அதன் மூலமாக கிடைக்கும் விட்டமின்களைக் கொண்டு ஆரோக்கியமாக கடைசிவரை வாழமுடியும். உணவே மருந்து என்பதை மனதில் கொள்ளுங்கள்!
1,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் உள்ளிட்ட பால் பொருட்கள் ஒவ்வாமல் போகலாம். இதனால் குழந்தைக்கு பேதி, வாந்தி, உடலில் தண்ணீர் வற்றிப்போவது, உட்காரும் இடம் வெந்து போவது போன்ற பாதிப்புகள் எழும். இதற்கு மருத்துவர் பரிசோதனையின் அடிப்படையில் தொடர் சிகிச்சையையும், மாற்று உணவுகளையும் பரிந்துரைப்பார். இந்தப் பிரச்னை மட்டுமல்ல, எந்தப் பிரச்னைக்கும் ‘பால்கூட குடிக்காம குழந்தை அழுதுட்டே இருக்கே… என்னமோ ஏதோ தெரியலையே…’ என்று மந்திரித்த கயிறுகளைக் கட்டுவது, கோயிலுக்கு அழைத்துச் சென்று விபூதி வாங்குவது, கை வைத்தியமாக பலதையும் செய்து பார்ப்பது… இவைஎல்லாம் குழந்தையின் அழுகையை இன்னும் அதிகரிக்கவே செய்யும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையின் உடலில் தண்ணீர் வற்றிய நிலை உருவாகும். இதனால் குழந்தையின் இதய ஓட்டம் நின்று உயிரிழப்புகூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது” என்று கடுமையாகவே எச்சரிக்கை செய்தார் மருத்துவப் பேராசிரியர் செல்வராஜ்.
‘விலை கொடுத்து வினையை வாங்குவது’ என்பது மருந்து, மாத்திரைகளின் விஷயத்தில் பலித்துவிடாமல் இருப்பதற்கு தேவை… கவனம், அதிக கவனம், மிக அதிக கவனம் மட்டுமே!
டாக்டர்கள் எழுதித் தரும் மருந்துச் சீட்டை வைத்து மட்டுமே மருந்துகளை வாங்கவேண்டும். அவற்றுக்கு உரிய ‘பில்’ வாங்குவது முக்கியம்.
மாத்திரைப் பட்டியிலும், மருந்து பாட்டில்களிலும் மருந்து தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி போன்றவை தெளிவாக அச்சடிக்கப்பட்டுள்ளனவா என்பதை கவனித்து வாங்கவேண்டும். அடித்தல் திருத்தல் இருந்தாலோ, அல்லது லேபிள் ஒட்டியிருந்தாலோ, காலாவதியாகி இருந்தாலோ… திருப்பிக் கொடுத்துவிடுங்கள்.
காலாவதியான மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது தோல் ஒவ்வாமை தொடங்கி, அரிப்பு, தடிப்பு, தோல்வீக்கம் உள்ளிட்ட பக்கவிளைவுகள் வரத்தொடங்கும். வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வாய்ப்புண், அஜீரணப் பிரச்னை தலைகாட்டும். கல்லீரல், சிறுநீரகம், கண் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
மருந்துகளை சூரிய வெளிச்சம் அதிகமுள்ள இடத்தில் வைத்தால், சீக்கிரமே காலாவதி ஆகிவிடும். ஆகவே, நிழலான இடத்தில்தான் வைக்கவேண்டும். அல்லது குளிர்சாதனப்பெட்டியில் 4 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் வைக்கவேண்டும்.
மாத்திரை உறையைத் திறக்கும்போதே, மாத்திரை உடைந்து, பவுடராக இருந்தாலும், குழாய் மாத்திரைகள் (டியூப் மாத்திரைகள்) ஈரப்பசையுடன், பிசுபிசுப்பாகக் காணப்பட்டாலும், காலாவதியாகிவிட்டன என்று புரிந்து கொள்ளுங்கள்.
மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட பல்வேறு ஆன்டிபயாடிக் மாத்திரைகள், இந்தியாவில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. ஏன், இந்தியாவிலேயே தடை செய்யப்பட்ட மருந்து, மாத்திரைகளும் சந்தையில் கிடைக்கத்தான் செய்கின்றன. உதாரணத்துக்கு, ‘KETOCONAZOLE’ என்ற மாத்திரை வெளிநாடுகளிலும், இந்தியாவின் சில மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது. என்றாலும், கடைகளில் தாராளமாகக் கிடைக்கிறது.
உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியா, கெட்ட பாக்டீரியா இரண்டின் வித்தியாசம், ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு தெரிவதில்லை. இப்படியிருக்க, இதுபோன்ற மருந்துகளை தொடர்ந்து சாப்பிடும்போது, உடலுக்குள் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அது எளிதில் சாகடித்துவிடும். கெட்ட பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகரித்து ‘க்ளாஸ்ட்ரிடியம் டிஃபிசிள்’ (Clostridium Difficile) என்ற பயங்கரமான கிருமியாக வளர்ந்துவிடுகிறது. இதனால் பேதி, குடல்புண் என்று பிரச்னைகள் வரத்தொடங்கி உயிரிழப்பு வரைகூட ஏற்படலாம். ”இத்தகைய கிருமிகளை அழிப்பது சுலபமல்ல. இதற்கான போதிய மருத்துவர்களோ… மருந்துவ வசதிகளோ நம் நாட்டில் சரிவர இல்லை. செலவழிக்க வேண்டிய பணமும் மிக அதிகம்” என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.