பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாவ்லோ என்ற நகரில் இன்று நள்ளிரவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்கவிழா வெகுபிரமாண்டமாக நடக்கவுள்ளது. இந்த போட்டியில் உலகெங்கிலும் இருந்து 32 நாடுகளின் அணிகள் கலந்துகொள்ள இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்கவிழா நிகழ்ச்சிக்காக சுமார் 600 நடனக்கலைஞர்கள் கடந்த சில வாரங்களாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். வண்ணமயமான வகைவகையான கலை நிகழ்ச்சிகள் இந்த பிரமாண்ட தொடக்கவிழாவில் இடம்பெற உள்ளது.
இந்த தொடக்க விழாவில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஜெனிபர் லோபஸ் உலககோப்பையின் அதிகாரபூர்வ பாடலை பாடவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஃபிஃபா தலைவர் பிளாட்டர், பிரேசில் அதிபர் தில்மா ரவூர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், பங்கேற்க உள்ளனர்.
இன்று தொடங்கவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறும்.
இன்று நடக்கவிருக்கும் முதல் ஆட்டத்தில் பிரேசில் அணி குரோஷியா அணியுடன் மோதுகிறது.
உலகக்கோப்பை போட்டியின் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.207 கோடியும், இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.148 கோடியும் பரிசாக கிடைக்கும். இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.3400 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தை இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு சோனி சிக்ஸ் சேனலில் பார்த்து மகிழலாம்.