படிப்பு, மதிப்பெண்கள் இதையெல்லாம் தாண்டி, என்னென்ன திறமைகள் இருக்கின்றன என்று பார்க்க ஆரம்பித்துவிட்டன… வேலை தரும் நிறுவனங்கள். இப்படிப்பட்ட சூழலில், ‘கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே துறை சார்ந்த அறிவினை வளர்த்துக்கொள்ளவும், வேலைவாய்ப்பைச் சுலபமாகப் பெறவும் என்னென்ன பயிற்சிகளையும், துணைப்படிப்புகளையும் படிக்கலாம்’ என்ற கேள்விகள் எல்லோரிடமும் எழுந்து நிற்கும்.
முதலில், பொறியியல் மாணவர்களுக்கான சப்போர்ட்டிவ் கோர்ஸ்கள் பற்றி பேசுகிறார் சென்னை, சாய்ராம் பொறியியல் கல்லூரியின் மேலாண்மை துறை இயக்குநர், முனைவர் மாறன். ”பொதுவாக அனைத்துத் துறை மாணவர்களுக்குமே சாஃப்ட் ஸ்கில் பயிற்சி முக்கியமானது. இதில் வேலைச் சூழலில் ஒருவர் எப்படிப் பேச வேண்டும், நடக்கவேண்டும், பழகவேண்டும், உடுத்தவேண்டும் என்பது தொடங்கி, ஆங்கில உச்சரிப்பு, குழு விவாதத்தில் பங்கேற்பது, ஒரு நிறுவனத்தில் குழுவாக இணைந்து பணிபுரிவது என்று பலவித பயிற்சிகள் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பில் மட்டுமல்லாது, தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் சமயங்களிலும் இது கைகொடுக்கும்!” என்றார். இதைத் தொடர்ந்து பொறியியல் மாணவர்களுக்கான துணைப்படிப்புகளைப் பட்டியலிட்டார்!
கலை மற்றும் அறிவியல் துறைக்கான துணைப்படிப்புகள் பற்றி சென்னை, அம்பத்தூர், ‘அன்னை வயலெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி’ முதல்வர் கமலா பாலகிருஷ்ணனிடம் கேட்டோம்.
”கலைக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படித்த மாணவர்களில் லட்சக்கணக்கானோர் வேலையின்றி தவிர்க்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம், பாடப் புத்தகத்தை தாண்டி எதையும் தெரிந்துகொள்ளாமல் இருப்பதுதான். இன்றைய சூழலில், துணைப்படிப்பு மிகவும் முக்கியம்! ஏற்கெனவே இருக்கும் துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை படிப்பதும் அவசியம்” என்று வலியுறுத்தியவர், ஒவ்வொரு துறை மாணவர்களுக்குமான சப்போர்ட்டிவ் கோர்ஸ்களைப் பட்டியலிட்டார்.