நாசரின் பேத்தி சாரா, தனது வீட்டில் செல்லப்பிராணிகளான ஆடு,கோழி, சேவல் என வளர்த்து வருகிறார். அவைகளுக்கு மனிதர்களை போலவே பெயர் வைத்து அன்புடன் கவனித்து வருகிறார். இதில் பாப்பா என்னும் சேவல், சாரா மீது மிகுந்த பிரியம் கொண்டுள்ளது. தினமும் சாரா படிக்கும் பள்ளிக்கு வருவதை வழக்கத்தையும் அந்த சேவல் வைத்துள்ளது.
இந்நிலையில் ஊர்த்திருவிழா ஒன்றிற்காக நாசரின் வீட்டிற்கு அவருடைய சொந்தபந்தங்கள் அனைவரும் வருகின்றனர். ஊர் எல்லைச்சாமிக்காக சாரா வளர்க்கும் சேவலை பலி கொடுக்க குடும்பத்தினர் முடிவு செய்கின்றனர். தான் ஆசை ஆசையாய் வளர்த்த சேவலை குடும்பத்தினர் பலி கொடுப்பதை தவிர்ப்பதற்காக சேவலை வீட்டில் உள்ள மறைவான இடத்தில் பாதுகாத்து வைக்கிறார் சாரா. எல்லைச்சாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலை காணாததால் சாமிக்குற்றம் வந்துவிட்டதாக கருதிய குடும்பத்தினர் அந்த சேவலை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சாராவை பழிவாங்க துடிக்கும் சரவணன் என்ற சிறுவன் சாரா சேவலை ஒளித்து வைத்திருந்ததை பார்த்து குடும்பத்தினர்களிடம் சொல்லிவிடுகிறான். குடும்பத்தினர் வந்து பார்க்கும்போது அந்த சேவல் என்ன ஆனது?. சேவலை சாரா காப்பாற்றினாரா? என்பதுதான் மீதிக்கதை
நாசர் தனது அனுபவ நடிப்பால் அனைவரையும் கவர்ந்து விடுகிறார். வீட்டு பெரிய மனிதராகவே வாழ்ந்துள்ளார். அவருக்கு மனைவியாக நடித்திருக்கும் விசாலாட்சி தனது கலகலப்பான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார்.
இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கும் நாசர் மகன் பாஷா, முதல் படம் போலவே தெரியவில்லை. ரொம்ப இயல்பான நடிப்பு. அத்தை மகளை காதலிக்க அவர் செய்யும் முயற்சிகள். அதற்கு அவரது தம்பியே தடையாய் இருப்பது கண்டு பொருமுவது என நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
படத்தின் உண்மையான ஹீரோ என்று பார்த்தால் சாராதான் என்பதில் சந்தேகமில்லை. நல்ல கனமான பாத்திரம். ஆனாலும் மழலை மாறாமல் இயல்பான நடிப்பை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த வயதிலேயே இத்தனை விதமான முகபாவனைகளை எப்படி காண்பிக்கிறார் என்பதே ஆச்சரியம்தான். இயக்குனர் விஜய் நன்றாக வேலைவாங்கியுள்ளார்.
படத்தின் திரைக்கதை மிக நேர்த்தியாக உள்ளது. ஆனால் இயக்குனர் விஜய் இதுவரை ஒரிஜினலாக சிந்தித்து கதை எழுதியதே இல்லை என்பதுதான் எங்கேயோ இடிக்கிறது. இது எந்த ஹாலிவுட் படத்தின் காப்பி என்பது இன்னும் இரண்டு நாட்களில் இணையதளங்களில் வெளிவந்துவிடும். அதன்பிறகு அவரை பற்றி விமர்சித்துக்கொள்ளலாம்.
பாடல்கள் மற்றும் பின்னணி இசை அருமை. மொத்தத்தில் குடும்பத்தோடு இந்த சைவ விருந்தை உண்டு மகிழலாம்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1qMxEIr” standard=”http://www.youtube.com/v/RBCQSY3BjPo?fs=1″ vars=”ytid=RBCQSY3BjPo&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep6633″ /]