தமிழகத்தில் இந்தியை எதிர்த்து போராடிய காலம் முடிந்துவிட்டது. இனி இந்தி மொழி வேண்டும் என்ற போராட்டம்தான் வெடிக்கும் என தமிழக பாஜகவின் முக்கிய தலைவர் இல.கணேசன் இன்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:”
தமிழகத்தில் மொழி பிரச்னையில் தற்போது நிலைமை முற்றிலும் மாறி உள்ளது. திமுக நினைப்பது போல் இது 1967 ஆம் ஆண்டும் இல்லை. 2014ஆம் ஆண்டு. இன்றைய நிலையில் தி.மு.க. ஆட்சியிலும் இல்லை. அதிகாரத்திலும் இல்லை. தற்போது கருணாநிதி பூஜ்ஜியத்தில் இருக்கின்றார்..
இன்றைய தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் எலோரும் இந்தியில் கடிதம் எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளை பொருட்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்ய இந்தி மொழியை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்துள்ளனர். அவர்களிடம் போய் இந்தி எதிர்ப்பை பற்றி கூறினால் எடுபடாது என்பதை தமிழக கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். எப்பொழுதோ நீர்த்துப் போன மொழி பிரச்னையை தற்போது மீண்டும் கையிலெடுத்து மலிவான விளம்பரம் தேட கருணாநிதி முயற்சித்தால் அது தோல்வியில்தான் முடியும்.
கருணாநிதி குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் இந்தி நன்றாக தெரியும். அவர்கள் குடும்பத்தார் மட்டும் இந்தி கற்று கொள்வார்கள். ஆனால் சாமானிய மக்களை மட்டும் இந்தி மொழியை கற்கவிடாமல் சதி செய்கின்றனர்.
கருணாநிதி தனது மொழிபற்று நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால் இனி அரசியல் நடத்த முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தி மொழி வேண்டும் என்ற போராட்டம் நடத்தவேண்டிய நிலை விரைவில் தமிழகத்தில் வரும் என்பதை திமுகவுக்கு நான் கூறிக்கொள்கிறேன். இவ்வாறு இல.கணேசன் கூறினார்.