நாயகன் நந்தா, நாயகி அனன்யா, வில்லன் நிகேஷ்ராம் ஆகிய மூன்று பெரியவர்கள், ஒரே ஒரு குழந்தை, ஒரு துப்பாக்கி, ஒரு கார், ஒரே ஒரு முழு நாள். இவற்றை வைத்துக்கொண்டு செம த்ரில்லராகத் தொடங்கி உணர்ச்சிகரமாக முடியும் கதைதான் அதிதி. இயக்குனர் பரதனுக்கு பாராட்டுக்கள்.
தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் நந்தா மனைவி அனன்யா, மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார். தனது அபார திறமையாலும், சாதுரியத்தாலும் அலுவலகத்தில் மிக வேகமாக முன்னேறுகிறான். இந்நிலையில் திடீரென ஒரு நாள் வில்லன் நிகேஷ் ராம் இவர்கள் குழந்தையைக் கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டுகிறான்.
பல வருடங்களாக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த நந்தா தம்பதியின் பணம், தொழில் என எல்லாவற்றையும் அழிக்கும் வில்லன், இவர்களை தெருத்தெருவாக ஒருநாள் முழுக்க அலையவைக்கிறான். குழந்தையைக் காப்பாற்றுவதற்காக அவன் சொன்ன எல்லாவற்றையும் செய்கின்றனர் நந்தாவும் அனன்யாவும். ஒருநாள் முழுவதும் பயங்கரமாக அலைக்கழிக்கப்பட்டபின்னர் வில்லன் எதற்காக குழந்தையை கடத்தினான், குழந்தையை மீட்க முடிந்ததா என்பதை நெகிழ்ச்சியான க்ளைமாக்ஸில் சொல்கின்றார் பரதன். அதுவரை வில்லன் என்று நினைத்துக்கொண்டிருந்த நிகேஷ் திடீரென நாயகனாக மாறுவது செம திருப்பம்.
காக்டெயில் படத்தின் ரீமேக்கான அதிதி பயங்கர திருப்பங்களுடன் விறுவிறுப்பாக செல்கின்றது. ஆக்சன் கதை என்றாலும், சண்டைக் காட்சிகள், ரத்தம் சிந்தும் கொடூர காட்சிகள் எதுவும் இல்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையில் படத்தை இரண்டரை மணிநேரம் ஓட்டிய பரதனைப் பாராட்டாமல் இருக்க முடியாது.,
கதையின் இடையிடையே புரியாத பல விஷயங்களுக்கு கிளைமாக்ஸில் விடை கொடுக்கின்றார் இயக்குனர்.
பாசமுள்ள அப்பா வேடத்துக்குக் கனகச்சிதமாக பொருத்தமாக இருக்கின்றார் நந்தா. புத்திக்கூர்மை, நெகிழ்ச்சி, அன்பு, பதட்டம் மற்றும் குற்ற உணர்வு போன்ற உணர்ச்சிகளை முகத்தில் மிக நன்றாக வெளிப்படுத்தியிருக்கின்றார் நந்தா.
வழக்கமாக குறும்புத்தனம் செய்யும் அனன்யாவுக்கு இந்த படத்தில் வித்தியாசமாக தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்டக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பு. காதல், பாசம், அச்சம், கோபம், மருட்சி, வெறுப்பு, மன்னிப்பு ஆகியவை கலந்த பாத்திரத்தை நன்றாகக் கையாண்டுள்ளார்.
வில்லனைப் போல வந்து கடைசியில் வேறு முகம் காட்டும் பாத்திரத்தில் நடித்துள்ள நிகேஷ் ராமுக்கு இது முதல்படம் போன்றே தெரியவில்லை. சூப்பர் நடிப்பு.
தம்பி ராமையாவின் கடி காமெடி படத்தின் வேகத்தை குறைக்கிறது. இவருடைய காட்சிகளை இயக்குனர் தவிர்த்திருக்கலாம். மேலும் இந்த படத்தில் தேவையில்லாமல் ரச்சனா மவுரியாவின் குத்தாட்டமும் திணிக்கப்பட்டுள்ளது.
அதிதி என்றால் விருந்தினர் என்று பொருளாம். ஆனால் அந்த விருந்தினரே வில்லனாக மாறினால் எப்படி இருக்கும் என்பதை விளக்குகிறது படம்.
விறுவிறுப்பு குறையாமல் இருப்பதால் அதிதியை கண்டிப்பாக பார்க்கலாம்.