அகத்தியர் வாழ்க்கை வரலாறு முதல் பாகத்தை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
அத்திட்டத்தை கைவிட்டு, அவர்களை அனுப்பி விட்டான். ஆனால், சில நாட்களில் அரக்கர்களின் அட்டகாசம் அதிகரித்து, யாகங்கள் முழுமையாக நின்று போயின. யாக குண்டங்களில் அசுரர்கள் மாமிசத்தையும், ரத்த மழையையும் பொழிந்து தீட்டை உண்டாக்கினர். எந்த யாகமும் நடைபெறாமல் தேவர்கள் மெலிந்து போயினர். இப்போது, இந்திரனின் கோபம் அக்னி மற்றும் வாயுவின் மீதே திரும்பியது.
மீண்டும் அவர்களை வரவழைத்து, ஏ அக்னி! ஏ வாயு! அன்று நான் சொன்னதை நீங்கள் செய்யாமல் போனதால், அரக்கர்கள் தங்கள் அட்டகாசத்தை முடித்து விட்டு, கடலுக்குள் போய் ஒளிந்து கொள்கின்றனர். கடலுக்குள் மறைந்திருப்பவர்களை யாரால் கண்டுபிடிக்க இயலும்? அவர்களைக் கொல்வதென்பது எப்படி சாத்தியம்? என் சொல்லைக் கேளாததால் ஏற்பட்ட துன்பத்தின் பலனை அனுபவிக்கும் வகையில், நீங்கள் பூலோகத்தில் பிறந்து மனிதர்கள் படும் வேதனையை அனுபவிக்க வேண்டும், என சாபமிட்டான். அக்னியும், வாயுவும் பூலோகத்தில் பிறந்தனர். அக்னி மித்திரா என்ற பெயரிலும், வாயு வருணர் என்ற பெயரிலும் வாழ்ந்தனர். இச்சமயம், தேவலோக மங்கையான ஊர்வசி, தான் செய்த தவறால், இந்திரனின் சாபம் பெற்று பூலோகம் வந்தாள். அவள், ஒரு நீர்நிலையில் நீராடிக் கொண்டிருந்த போது, அவளை மித்திராவும், வருணனும் பார்த்தனர். அப்படி ஒரு பேரழகியை அவர்கள் கண்டதே இல்லை. அப்போது, அவர்களிடம் இருந்து வீரியம் வெளிப்பட்டது. மித்திரர் தன் கையில் இருந்தகும்பத்தில் வீரியத்தை இட்டார். வருணரோ, அதைத் தண்ணீரில் இட்டார். கும்பத்தில் இருந்த வீரியம் வளர்ந்து ஒரு குழந்தையாக மாறியது. அது சில நாட்களில் கும்பத்தில் இருந்து வெளிப்பட்டு உயிர் பெற்று நடமாடியது. அந்த உருவம் கமண்டலம், ஜடாமுடியுடன் தோற்றமளித்தது.
குடத்தில் இருந்து பிறந்ததால், அந்த குள்ள முனிவருக்கு கும்பமுனிவர் என்றும், குடமுனிவர் என்றும் தேவர்கள் அழைக்கலாயினர். அரக்கர்களைக் கொல்ல கும்ப அளவே உயரமுள்ள ஒரு முனிவர் பிறந்து விட்டதில் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. இது ஒருபுறம் இருக்க, வாயுபகவான், தண்ணீரில் இட்ட வீரியத்தில் இருந்து வசிஷ்டர் பிறந்தார். இவர் அயோத்தியை நோக்கி போய் விட்டார். பிற்காலத்தில், இவர் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமருடன் சேவை செய்ய வேண்டியிருந்ததைக் கருத்தில் கொண்டு அங்கு சென்று விட்டார். கும்பமுனி உருவத்தில் தான் குள்ளம். ஆனால், அவரது சக்தியோ எல்லை மீறியதாக இருந்தது. அக்னியில் இருந்து பிறந்தவர் என்பதால், இவர் உடலில் வெப்பம் தகித்தது. தன் வெப்பத்தை தணிக்க தண்ணீரின் மீதே படுத்திருப்பார். அவரிடம், தேவர்கள் தங்கள் குறையை வெளியிட்டனர். சுவாமி! தங்களால் மட்டுமே அரக்கர்களை அழித்து எங்களைக் காக்க முடியும், என்றனர்.அகத்தியர் அவர்களுக்கு அருள் செய்வதாக வாக்களித்தார். தேவர்களைக்காக்கும் தனது கடமை தடங்கலின்றி நிறைவேற, தனக்கு வசதியான தண்ணீரிலேயே தவத்தை துவங்கினார். 12 ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீரில் படுத்த படியே இறைவனை தியானித்தார். இறைவன் அருளும் கிடைத்தது.
அரக்கர்களை சம்ஹாரம் செய்ய அவர்கள் மறைந்திருந்த கடலை நோக்கிச் சென்றார். தங்களை குள்ள முனிவர் ஒருவர் கொல்ல வந்துள்ளார் என்பதை அறிந்த அரக்கர்கள் தண்ணீரை விட்டு வெளியே வரவே இல்லை. ஆனால், அகத்தியர் விடுவாரா என்ன? தண்ணீர் முழுவதையும், தன் உள்ளங்கைக்குள் அடக்கி சித்து விளையாட்டு செய்தார். ஒட்டுமொத்த கடல் நீரும் அவர் கைக்குள் வந்தது. தீர்த்தம் குடிப்பது போல் குடித்து விட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், அசுரர்கள் மீது பாய்ந்தனர். இரு தரப்புக்கும் கடும் சண்டை நடந்தது. முடிவில், அரக்கர்கள் கொல்லப்பட்டனர். கடலையே சுருக்கி சாப்பிட்டவர் என்றால் சும்மாவா? மேலும், உலகையே காக்க வேண்டிய தேவர்களையே பாதுகாத்தவர் என்றால் அவரது சக்தி எத்தகையதாக இருக்கும்? அந்த மாமுனிவர், தான் வந்த வேலையை அத்துடன் முடித்துக் கொள்ள வில்லை. மகாவிஷ்ணு அப்போது மனித அவதாரமான ராமாவதாரம் எடுத்து இலங்கையிலே இருந்தார். ராமனின் மனைவியான சீதாவை, அந்நாட்டு அரக்க அரசனான ராவணன் தூக்கிச் சென்று விட்டான். அவளை மீட்பதற்காக பெரும்படையுடன் சென்றிருந்தும் கூட, அவரால் ராவணனை அவ்வளவு எளிதில் ஜெயிக்க முடியவில்லை. அங்கு சென்ற அகத்தியர், ராமனிடம் சூரிய வழிபாடு செய்வதன் மூலம் பெரும் பலம் பெறலாம் எனக்கூறி, ஆதித்ய ஹ்ருதயம் என்னும் ஸ்லோகங்களைப் போதித்தார். மேலும் அவருக்கு சிவகீதையையும் கற்றுத் தந்தார்.