ஆந்திராவில் உள்ள ஒரு கிராம மக்களின் போராட்டத்தால் ரஜினியின் லிங்கா படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. இதேபோல் இந்த பகுதியில் இதற்கு முன்பு நடந்த பாஹுபாலியின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி நடிக்கும் லிங்கா படத்தில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, சந்தானம் ஆகியோர் நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள ரெங்காரெட்டி மாவாட்டத்தில் உள்ள அஞ்சப்பூர் என்ற கிராமத்தில் நேற்று படப்பிடிப்பு நடந்தபோது திடீரென நூற்றுக்கணக்கான கிராம மக்கள் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து படப்பிடிப்பை உடனடியாக நிறுத்துமாறு பிரச்சனை செய்தனர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பதட்டம் ஏற்பட்டது.
இது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் திரைப்படம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்தினால் கடும் விளைவுகள் ஏற்படும் என படக்குழுவினர் எச்சரித்தபோது, ‘ரஜினிக்கு என்ன கொம்பா முளைத்துள்ளது. படப்பிடிப்பை நிறுத்தாவிட்டால் படக்குழுவினர்களை அடித்து விரட்டுவோம் என மிரட்டியதால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
கிராமத்தின் அருகில் இருந்த ஏரியில் கலர்ப்பொடிகளை தூவி தண்ணீரை லிங்கா படக்குழுவினர் மாசு படுத்திவிட்டதாகவும், அதனால்தான் படப்பிடிப்பை நிறுத்த சொன்னதாகவும் ஊர்மக்கள் கூறினர். ஆனால் படக்குழுவினர்களோ முறைப்படி தாங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திலும், நீர்ப்பாசன துறை அலுவலகத்திலும் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறினர். கிராமத்தினர்களின் போராட்டத்தை அடுத்து படப்பிடிப்பு நேற்று ரத்து செய்யப்பட்டது.