கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆன ஜெய்லலிதா என்ற திரைப்படம் பிரச்சனைகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
மலையாளத்தில் வெளியான மாயமோகினி என்ற திரைப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்த திரைப்படத்திற்கு முதலில் ஸ்ரீமதி ஜெயலலிதா என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால் தமிழக முதல்வரின் பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் பின்னர் ஜெய்லலிதா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
நாடகக்கம்பெனி நடத்தும் ஒருவரை அவரது மகனே கடத்தி செல்கிறார். தந்தையை கடத்திய மகனை தேடிச்செல்லும் மகள் தந்தையை வெற்றிகரமாக மீட்டு வரும் கதைதன் இது. இதில் மகன், மகள் ஆகிய இரண்டு கேரக்டர்களிலும் காமெடி நடிகர் சரண் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் பெயர் தமிழக முதல்வரின் பெயரை ஒட்டி இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்கறிஞர் சசிகுமார் என்பவர் பெங்களூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த படத்தை முழுவதுமாக பார்த்த பெங்களூர் நீதிமன்ற நீதிபதி, படத்தில் தமிழக முதல்வரை குறிப்பிடும் எந்த ஒரு காட்சியும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த வாரம் சுமாராகத்தான் ஓடியது. நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் ஏற்பட்ட இலவச விளம்பரம் காரணமாக பெங்களூர் திரையரங்குகளில் இந்த வாரம் நல்ல கூட்டம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.