பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தொடரில் நாளை ரயில்வே பட்ஜெட்டும் வரும் 10ஆம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இன்றைய முதல்நாள் கூட்டத்தில் இராக்கில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து அறிக்கை ஒன்றை நாடாளுமன்ற இரு அவைகளிலும் அறிக்கை ஒன்றை தாக்கல் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிக்கை செய்ய இருக்கின்றார். அதன்பின்னர் நாளைரயில்வே பட்ஜெட்டை ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கௌடா தாக்கல் செய்வார்.
பொருளாதார ஆய்வறிக்கை, மற்றும் 2014-2015ஆம் ஆண்டிற்கான பொதுபட்ஜெட் ஆகிய இரண்டையும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்ய இருக்கிறார்.
இதனிடையே எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யாததால் இதுகுறித்து பிரச்சனை எழுப்ப காங்கிரஸ் தயாராகி வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே எதிர்க்கட்சி தலைவர் பிரச்சனையை முடிக்க வேண்டும் என அந்த கட்சி கோரி வருகிறது. இதனால், ஆளும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களுக்கும், காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விலைவாசி பிரச்னை: இக்கூட்டத்தொடரில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு, ரயில்வே கட்டண உயர்வு, நாட்டின் கூட்டாட்சி அமைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் விரும்புகின்றன.