அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் சென்னை உள்பட வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுமுதல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் முடிந்தும், கடந்த வாரம் வரை, 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் வாட்டியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
கடந்த வாரம் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இந்நிலையில் அரபிக் கடலில் நேற்று காலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஒன்று தோன்றியுள்ளது. இதன் பயனாக சென்னை உள்பட வட தமிழகம், புதுச்சேரி, கேரளம், லட்சத்தீவு, ஆகிய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் இன்று அறிவித்துள்ளது.