புதிதாக ஃப்ளாட் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்.

nav62aபெரிய விபத்து ஒன்று நடந்தபிறகே அதுமாதிரி இனி எதுவும் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிப்பது நமக்கு வழக்கமாகவே ஆகிவிட்டது. சென்னையை அடுத்துள்ள போரூருக்குப் பக்கத்தில் இருக்கும் மவுலிவாக்கத்தில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று அடியோடு விழுந்து தரைமட்டமானதில்  58 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இந்த விபத்துக்குப்பின், ஃப்ளாட் வாங்கலாம் என்ற யோசனையில் இருந்தவர்கள் சற்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பொதுவாக, ஃப்ளாட் வாங்க வீட்டுக் கடன் கிடைக்குமா, அந்த ஃப்ளாட்டுக்கு வந்துசெல்ல போக்குவரத்து வசதி உண்டா, அருகில் பள்ளிக்கூடம், மருத்துவமனை உண்டா என்கிற மாதிரியான விஷயங்களைத்தான் ஃப்ளாட் வாங்குபவர்கள் பார்த்தார்கள்.  ஆனால், முகலிவாக்கம் அடுக்குமாடி விபத்துக்குப்பின், புதிதாக ஃப்ளாட் வாங்குபவர்கள் வேறு சில முக்கிய விஷயங்களையும் கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த விஷயங்கள் என்னென்ன என்று பல்வேறு தரப்பினருடன் பேசினோம். கட்டட அனுமதி வாங்குவதில் தொடங்கி, கட்டிய வீட்டை வாடிக்கை யாளர்களிடம் ஒப்படைப்பது வரை கவனிக்க வேண்டிய விஷயங்களை அடுக்கினார்கள் அவர்கள். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

நிறுவனமா, பொறியாளரா?

சிறிய அளவிலான அடுக்குமாடிக் குடியிருப்போ அல்லது பல அடுக்குக் குடியிருப்போ, எந்தக் கட்டுமானமாக இருந்தாலும் அதை மேற்கொள்ளும் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அந்தக் கட்டுமான திட்டம் நேரடியாக ஒரு பொறியாளரால் கட்டப்படுகிறதா அல்லது அடுக்குமாடி வீடுகள் கட்டுவதைத் தொழிலாகக்கொண்ட  ஒரு நிறுவனம் கட்டுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

ஒரு பொறியாளரின் நேரடி கண்காணிப்பின் மூலம் கட்டப்பட்டு வரும் திட்டம் எனில், தொழில்நுட்ப விவரங்களை நமக்கு நேரடியாக விளக்குவார். ஆனால், கட்டுமான நிறுவனம் மேற்கொள்ளும் திட்டம் எனில் நிறுவனத்தின் சார்பாக அவர்களின் பிரதிநிதிகளோடுதான் பேச முடியும். அவர்களது வாக்குறுதிகள் அனைத்திலும் உண்மை இருக்கும் என்று சொல்ல முடியாது. வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கேற்ப, பொய்யான பல தகவல்களை அவர்கள் சொல்வதற்கு நிறையவே வாய்ப்புண்டு.

நம்பகத்தன்மை!

கட்டுமானத் திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனம் அல்லது பொறியாளரின் நம்பகத்தன்மையைப் பார்க்க வேண்டியது அவசியம். எத்தனை வருடமாக அவர் இந்தத் துறையில் இருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து வருடம் இந்தத் துறையில் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். இதற்குமுன் கட்டியுள்ள கட்டடங்களை எந்தப் பகுதியில் கட்டியுள்ளார், அதன் தற்போதைய நிலை, அங்கு வசிப்பவர்களின் அனுபவம் போன்றவற்றைக் கேட்டறிய வேண்டும். அவரால் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டுமானம் என்ன என்பதைக் கேட்டறிந்து அதையும் பார்த்துவர வேண்டும்.

நிலத்தின் தன்மை!

கட்டடம் அமைந்துள்ள நிலத்தின் தன்மை என்ன என்பதை நாம் நேரடியாகத் தெரிந்துகொள்வது அவசியம். அந்த இடத்தில் ஏற்கெனவே கட்டடம் அமைந்திருந்ததா அல்லது முதல்முறையாக கட்டப்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம். ஏற்கெனவே கட்டடம் இருந்த இடமாக இருந்தால், மண் கெட்டிப்பட்டு கடினத்தன்மை கொண்டதாக மாறியிருக்கும். இப்போதுதான் முதல்முறையாகக் கட்டப்படும் இடத்தில் மண் இளகும்தன்மையோடு இருக்கும்.

கட்டடம் கட்டுவதற்குமுன் மண் பரிசோதனை செய்வது அவசியம். பல அடுக்குக் கட்டடம் என்றால், தளம் அமையவுள்ள பகுதிகளில் சராசரியாக ஆறு இடங்களில் மண் பரிசோதனை செய்ய வேண்டும். இந்தப் பரிசோதனை அறிக்கையில் அந்தப் பகுதியில் உள்ள மண்ணின் அடர்த்தி, எடை தாங்கும் தன்மை, எத்தனை அடிக்கு கீழே உறுதியான மண் அடுக்கு உள்ளது, அதில் கட்டப்பட வேண்டிய கட்டுமானம், தூண்கள் அமைக்கப்பட வேண்டிய விவரம் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த அறிக்கையின் விவரங்கள் நமக்குப் புரியவில்லை எனில், அந்த அறிக்கையைக் கேட்டுவாங்கி நமக்குத் தெரிந்த பொறியாளர்களிடத்தில் விவரங்களைக் கேட்கலாம்.

கட்டுமான வடிவமைப்பு (ஸ்ட்ரக்சுரல் டிசைனிங்)!

மண் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், அந்த இடத்தில் எந்தவகையான கட்டுமானம் அமைக்கலாம் என்பதைக் குறிப்பிட்டு வழங்கப்படுவது கட்டுமான வடிவமைப்பு (ஸ்ட்ரக்சுரல்  டிசைனிங்) அறிக்கை. இதை புரமோட்டர்கள், அதற்கென இருக்கும் நிறுவனங்களிடம் வாங்கித் தர வேண்டும். இந்த அறிக்கை அடிப்படையில்தான் உள்ளாட்சி அமைப்பு திட்ட வரைபடத்துக்கான அனுமதியை வழங்கும். இந்த அறிக்கை யில் கட்டடத்தின் எடைக்கு ஏற்ப செய்யப்பட வேண்டியவை என்னென்ன என குறிப்பிடப்பட்டிருக்கும்.

உதாரணமாக, கட்டடம் கட்டப்படும் இடம் நீர்ப்பிடிப்புத் தன்மை கொண்ட நிலமாக இருந்தால், அதற்கு எந்தவகையான தொழில்நுட்பம் பயன்படுத்தினால் சரியாக இருக்கும் என்கிற ஆலோசனைகள் இந்த அறிக்கை யின்படிதான் முடிவு செய்யப்படும். குறிப்பாக, எத்தனை அடி ஆழத்தில் பில்லர்கள் அமைக்கப்பட வேண்டும்; அவற்றின் சுற்றளவு, பயன்படுத்த வேண்டிய கம்பிகளின் தடிமன்கள், காங்க்ரீட், ஜல்லிகள் அளவு விவரங்கள் இந்த அறிக்கையில் இருக்கும்.

சட்ட விவரங்கள்!

திட்ட அனுமதியின்படிதான் வரைபட அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். குறிப்பாக, இந்த அனுமதி காலாவதியாகாமல் அமலில் உள்ளதா என்று பார்க்க வேண்டும். அனுமதியில் உள்ளபடிதான் கட்டடம் கட்டப்பட்டுள்ளதா, எத்தனை அடுக்குகளுக்கு அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது, கட்டடத்தில் எங்காவது ஒருபகுதியில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா, இதனால் எதிர்காலத்தில் என்னமாதிரியான பாதிப்புகள் வரும் என்பதையெல்லாம் தெரிந்துகொள்வது அவசியம்.

கம்ப்ளீஷன் சான்றிதழ்!

கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டபின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரி களால் குடியிருக்கத் தகுதியானது, விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்கிற கம்ப்ளீஷன் சான்றிதழ் வாங்கப்பட்டிருக்க வேண்டும். இந்தச் சான்றிதழை வீடு வாங்குபவர்கள் கேட்டு வாங்க வேண்டியது கடமை. ஒரு கட்டடம் எப்படி கட்டப்பட்டு இருக்கிறது என்பதை ஆராய்ந்தபின்பே அதிகாரிகள்  இந்தச் சான்றிதழைத் தரவேண்டும். இதேபோல, கட்டுமானத் தரமும் சோதிக்கப்பட வேண்டும்.  ஆனால், நடைமுறையில் இப்படி சோதனை செய்வது மிகக் குறைவுதான். இந்தச் சான்றிதழ் இல்லாத  கட்டடங் களை பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளவே கூடாது.

அடுக்குமாடி வீடுகள் நமது காலத்தின் தவிர்க்க முடியாத தேவையாக இருக்கிறது. தவிர, வங்கிக் கடன் மூலமாகத்தான் வீடு வாங்க வேண்டிய நிலைமையில் உள்ளனர் நடுத்தர மக்கள். கட்டடம் கட்டும் பில்டர் பணத்துக்கு ஆசைப்பட்டோ, அல்லது அலட்சியம் காரணமாகவோ விதிமுறைகளை சரியாகப் பின்பற்றாமல் போனால், இதுபோன்ற விபத்துகளை எதிர்காலத்தில் தவிர்க்க முடியாமல் போய்விடும்.

அடுக்குமாடிக் கட்டடங்கள் எப்படி கட்டப்படுகின்றன என்பதை அரசாங்கம் தனது கழுகுக் கண்களால் கவனிக்க வேண்டும். அதேநேரத்தில், அதை வாங்குகிற மக்களும் கவனமாக இருந்தால்தான்  அடுக்குமாடி வீட்டில் நிம்மதியாகத் தூங்க முடியும்!

Leave a Reply