ஜப்பானில் கடந்த 2011 ஆம் ஆண்டு நிலநடுக்கமும் அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியின் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
ஜப்பானின் பசிபிக் கடற்கரையோரம் ஒட்டியுள்ள நமி என்ற பகுதியில் இன்று காலை 4.22 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 அளவில் இந்த நிலநடுக்கம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த பயங்கர நிலநடுக்கம் காரணமாக ஜப்பான் கடலில் ஒரு மீட்டர் உயரத்துக்கும் அதிகமான அளவில் ராட்சத அலைகள் எழ வாய்ப்பு இருப்பதாகவும் புகுஷிமா அணு உலை அமைந்திருக்கும் கடலோரப் பகுதிகளான இவாட்டே, மியாகி ஆகிய நகரங்களில் ஒட்டியுள்ள கடலில் ‘சுனாமி’ ஏற்படலாம் என்றும் ஜப்பான் வானிலைத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இவாட்டே, மியாகி ஆகிய பகுதியில் உள்ள மக்களை உடனடியாக தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஜப்பான் பேரிடர் மேலாண்மை குழுவினர் வழிவகை செய்து வருகின்றனர்.
இந்த நிலநடுக்கத்தால் புகுஷிமா அணு உலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்த அணு உலையை நிர்வகித்து வரும் டோக்கியோ மின் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.