நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, தேசிய நதிகளை இணைத்தால் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், மின்சார உற்பத்திக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார். மேலும் மாநிலங்களின் ஒத்துழைப்போடு முதல்கட்டமாக தென்னகத்தில் ஓடும் நதிகள் இணைக்க வழிவகை செய்யப்படும் என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மத்திய அரசின் தேசிய நதிகள் இணைக்கும் திட்டத்தால் மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. கேரளாவில் ஓடும் நதிகளை தமிழகத்துடன் இணைக்க கேரள அரசு ஒருபோதும் சம்மதிக்காது. தமிழ்நாட்டுடன் கேரளாவின் நதிகளை இணைத்தால் கேரள மாநிலத்தில் சுற்றுச்சூழலில் பெரிதும் பாதிப்பு ஏற்படும் மாசு ஏற்படும். மண்வளமும் பெருமளவில் பாதிக்க வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி கேரள நதிகளான பம்பா, அச்சன் கோவில் நதிகள் வறண்டு போகவும் வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே கேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்கும் திட்டத்திற்கு எதிராக கடந்த 2003ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. எனவே கேரளாவின் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு கேரள முதல்வர் என்ற முறையில் நான் ஒருபோதும் சம்மதம் தெரிவிக்க மாட்டேன். என்று கூறியுள்ளார்.