இருக்கு ஆனா இல்ல. திரைவிமர்சனம்

Irukku_Aana_Illa_movie_Stills_01ஐ.டி. கம்பெனியில் எவ்வித பிடிப்பும் இல்லாமல் பணிபுரிகிறார் நாயகன் விவாந்த். இவருக்கு ஒரே ஒரு நண்பன் ஆதவன். தினமும் குடியும் குடித்தனமுமாக பொழுதை கழிக்கிறார் நாயகன். இந்நிலையில் ஒருநாள் சரக்கடித்துவிட்டு பைக்கில் செல்லும்போது லாரி ஒன்று விவாந்த்தின் பைக்கையும், ஒரு ஆட்டோவையும் மோதி விடுகிறது. ஆட்டோவில் இருந்த நாயகி ஈடன் சம்பவ இடத்திலேயே இறந்துவிடுகிறார். ஆனால் அவரை கண்டுகொள்ளாமல் வீட்டிற்கு வந்து படுத்துக்கொள்கிறார் விவாந்த்.

ஆனால் அந்த சம்பவத்திற்கு பின்னர் தினமும் விவாந்த்தின் படுக்கையில் ஆவியாக ஈடன் வந்து படுத்துக்கொள்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் விவாந்த் தனது நண்பன் ஆதவனின் துணையுடன் மனநல டாக்டர் ஒய்.ஜி.மகேந்திரனை சந்திக்கிறார்.

பேய் இருப்பது உண்மைதான் என்றும், பேயின் ஆசையை நிறைவேற்றினால் அது நம்மை விட்டு போய்விடும் என ஒய்.ஜி.மகேந்திரன் ஆலோசனை கூறுகிறார். எனவே மறுநாள் பேயாக வரும் ஈடனிடம் அதன் ஆசையை கேட்கிறார் விவாந்த்.

தனது குடும்பத்தினர்கள் என்ன ஆனார்கள் என்பதை கண்டுபிடித்து கொடுத்துவிட்டால் விவாந்த்தை விட்டுவிடுவதாக ஈடன் கூற, ஈடனின் குடும்பத்தை தேடி அலைகிறார் விவாந்த்.

ஈடனின் குடும்பத்தை கண்டுபிடிக்கும் விவாந்த், ஈடனின் சகோதரி ஒருவர் அதே விபத்தில் சிக்கி கோமா நிலையில் இருப்பதை கண்டறிகிறார். ஈடனின் சகோதரியை காப்பற்றுவதற்காக தனக்கு வந்த வெளிநாட்டு வாய்ப்பையும் உதறி தள்ளுகிறார். இந்நிலையில் அந்த மருத்துவமனையின் மருத்துவர் ஈடன் சகோதரியின் இருதயத்தை எடுக்க சதி செய்கிறார். அந்த சதியை விவாந்த் முறியடித்தாரா? ஆவி ஈடன் விவாந்த்தை விட்டு விலகியதா? என்பதே மீதிக்கதை.

முதல்படமாக இருந்தாலும் பல இடங்களில் அழுத்தந்திருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் விவாந்த். அப்பாவித்தனமான கேரக்டருக்கு பொருத்தமான முகம். நாயகி ஈடனுக்கு படம் முழுக்க ஆவியாக வரும் வேடம் என்பதால் நடிப்பதற்கு வாய்ப்பு குறைவு. மனிஷா ஸ்ரீ, ஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பு ஓகே.

விறுவிறுப்பு இல்லாத திரைக்கதை, எடிட்டிங்கில் செய்த தவறு ஆகியவை படம் பார்ப்பவர்களின் பொறுமையை சோதிக்கிறது. பின்னணி இசை மிக மோசம். மொத்தத்தில் படத்தில் எதுவுமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

Leave a Reply