ஹரி இயக்கத்தில் தயாராகி வரும் பூஜை திரைப்படத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் நடித்து வருகின்றனர். பூஜை படத்தின் படப்பிடிப்பு காரைகுடியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன் காரைக்குடியில் அடித்த வெயிலை கண்டு அதிர்ந்து விட்டாராம், பெரும்பாலான காட்சியில் பொட்டல் மைதானத்தில் எடுக்கப்பட்டதால் வெயிலின் தாக்கம் அவரை கடுமையாக பாதித்துள்ளது.
அதன்பின்னர் இந்தி படத்தின் படப்பிடிப்பு ஒன்றுக்காக அடுத்த நாள் மும்பை சென்ற ஸ்ருதிஹாசன் அங்கு பெய்த கனமழையில் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரைக்குடிக்கு நேர்மாறாக மும்பையில் பேய்மழை பெய்ததால் காரைக்குடியை விட மும்பையில் அதிகளவு அவதிக்குள்ளாகியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த ஸ்ருதிஹாசன், காரைக்குடியில் வெயிலும், மும்பையில் மழையும் என்னை கொலை செய்ய வந்த கொலைகாரர்கள் போல் இருந்தனர். இவ்வளவு அதிகமான வெயிலையும், கடுமையான மழையையும் அடுத்தடுத்து பார்த்த எனக்கு இதுவரை கிடைக்காத ஒரு புது அனுபவம் என்று தெரிவித்திருந்தார்.
ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் பூஜை என்ற படத்திலும், தெலுங்கில் அகடு என்ற படத்திலும், இந்தியில் வெல்கம் பேக், கப்பார், ராக்கி ஹேண்ட்சம், யாரா ஆகிய நான்கு படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். இதுபோக விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவருடைய கால்ஷீட் டைரி 2015 டிசம்பர் மாதம் வரை நிறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.