சட்டசபைக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி தற்போது நடந்து கொண்டிருக்கும் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் முழுவதும் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூடியதும், ‘சுனாமி நிவாரண திட்டத்தை தி.மு.க ஆட்சியில் முறையாக செயல்படுத்தவில்லை என்று அமைச்சர் உதயகுமார் குற்றஞ்சாட்டி பேசினார்.
இந்த குற்றச்சாட்டை கண்டித்து தி.மு.க உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று கண்டனம் தெரிவித்தனர். அவரிடம் கையை நீட்டி ஆவேசமாக பேசினர். இதனால் திமுக உறுப்பினர்கள் அனைவரையும் கூண்டோடு சபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
ஒரு சட்டசபை கூட்டத்தொடரில் மூன்று முறை உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ய சபாநாயகருக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, திமுக உறுப்பினர்கள் அனைவரையும் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் தனபால் உத்தரவிடுவதாக கூறினார்.
இதனால் திமுக உறுப்பினர்கள் வரும் நாட்களில் இந்த தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு திமுக சட்டசபை உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.