டெல்லி மெட்ரோ ரயிலில் இருந்து கீழே விழுந்து தற்கொலை முயற்சி செய்த காதல் ஜோடி ஒன்று சிறுகாயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி சட்டார்பூர் ரயில் நிலையத்தில் நேற்று வந்த மெட்ரோ ரயிலில் இருந்து காதல் ஜோடி ஒன்று கீழே விழுந்தனர். அந்த சமயத்தில் ரயில் பிளாட்பாரத்தில் வந்ததால் அவர்கள் சிறுகாயத்துடன் உயிர் பிழைத்தனர்.
டெல்லியை சேர்ந்த 28 வயது அமித் செளகான் மற்றும் 25 வயது மோஹினி ஆகிய இருவரும் கடந்த மூன்று வருடங்களாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இவர்கள் ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். இவர்கள் இருவரும் ரயிலில் முதன்முதலாக சந்தித்ததால், ரயிலில் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
ஆனால் இவர்களது நல்லநேரம், இவர்கள் தற்கொலை செய்ய ஓடும் ரயிலில் இருந்து குதித்த இடம் ரயில்வே பிளாட்பாரம் என்பதால் சிறுகாயத்துடன் உயிர் பிழைத்தனர். பின்னர் இவர்கள் இருவரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதலுதவி பெற்று பின்னர் போலீஸாரிடம் கவுன்சிலிங் பெற்று வருகின்றனர்.