ஸ்காட்லாந்து நாட்டில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நாட்டின் பாரம்பரியமிக்க செல்டிக் பாரக் என்ற மைதானத்தில் நடைபெற்றது.
பிரிட்டன் நாட்டின் காமெடி நடிகை கரென் டன்பார் பாடிய, வெல்கம் டு ஸ்காட்லாந்து என்ற அருமையான பாடலுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. அவருடன் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் பாரோமேன் அவர்களும், அவரது குழுவினர்களும் இணைந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பின்னர் ஸ்காட்லாந்து நாட்டின் பிரபல பாடகர் சூசுன் பாயல், காமன்வெல்த் அமைப்பின் தலைவரும், இங்கிலாந்து ராணியுமான எலிசபெத்தை வரவேற்று ஒரு பாடலை பாடினார்.
ராணி எலிசபெத் அவர்களுக்கு சிறப்பான மரியாதையும், வரவேற்பும் வழங்கப்பட்டது. காமன்வெல்த் விளையாட்டு அமைப்பின் தலைவர் துங்கு இம்ரான் ராணிக்கு சிறப்பு மரியாதை அளித்தார்.
மேலும் பல்வேறு நாடுகளிலும் சுற்றி வந்த காமன்வெல்த் ஜோதியை, ஸ்காட்லாந்தின் பிரபல சைக்கிள் பந்தய வீரர் மார்க் பீமன்ட் மினி ஜெட் விமானத்தின் மூலம் அரங்கத்திற்கு கொண்டு வந்தார். அதன்பின்னர் இந்த போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்கள் உள்பட அனைத்து நாடுகளின் விளையாட்டு வீரர்களும் தங்கள் நாட்டு கொடியை ஏந்தியவாறு அணிவகுத்து வந்தனர். இந்தியா தரப்பில் துப்பாக்கிச் சுடும் வீரர் விஜயகுமார் தலைமையில் வீரர்கள் தேசிய கொடியை கையில் ஏந்தி அணிவகுத்தனர். இந்தபோட்டியில் இந்தியா உட்பட 71 நாடுகள் பங்கேற்கின்றன.