ஏழைகள் சேர்ந்து அமைத்த ஏழை மாரியம்மன் கோவிலின் சிறப்புகள்.

templeபுதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் வழியில் உள்ளது வில்லியனூர். இங்கே உள்ள தேவி ஏழை மாரியம்மன், மிகுந்த வரப் பிரசாதி. நூறாண்டுகள் பழைமை வாய்ந்த ஆலயம் இது என்கிறார்கள் பக்தர்கள். செடல் உற்ஸவத் திருவிழா நடைபெறும் ஆலயம் இது.

ஜமதக்னி முனிவர்- ரேணுகா தேவியின் சரிதம் தெரியும்தானே? இந்த தேவியே பல தலங்களிலும் ஸ்ரீமாரியம்மனாக அருள்புரிகிறாள் என்பர். மழைக்கான தெய்வமாகவும் அவளைப் போற்றுவர். இந்த தேவி சிவனாரிடம் கேட்டுப் பெற்ற வரத்தின் படி, பல ஆலயங்களில் சிரசு மட்டுமே கொண்டு, இன்றளவும் அருள்பாலித்து வருகிறாளாம்.

புதுச்சேரி மாநிலத்தில் சாமியார் தோப்பு எனும் பகுதியில் இருந்து, சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு இந்த ஊருக்குச் சித்தர் ஒருவர் வந்தார். ‘இங்கே தேவிக்கு ஓர் ஆலயம் அமைத்தால், இந்த ஊர் இன்னும் செழிக்கும்’ என அருளினார். அதையடுத்து, மக்கள் நிதி திரட்டி, இந்த ஆலயத்தைக் கட்டி, வழிபடத் துவங்கினார்கள். ஏழை மக்கள் ஒன்று சேர்ந்து ஆலயம் எழுப்பியதால், கருவறையில் குடிகொண்டிருக்கும் அன்னைக்கு தேவி ஏழை மாரியம்மன் எனத் திருநாமம் உண்டானது என்கிறார்கள் பக்தர்கள்.

temple 1

கோயிலின் ஸ்தல விருட்சம் அரச மரம். இங்கு ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீஐயப்பன் ஆகியோருக்கு தனிச் சந்நிதிகள் உள்ளன. வருடந்தோறும் ஆடி மாதத்தில், கொடியேற்றத் துடன் துவங்கும் திருவிழா, தொடர்ந்து 11 நாள்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும். தினமும் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், இரவில் திருவீதியுலா என அமர்க்களப்படும். பாரிவேட்டை, முப்பல்லக்கு உலா, செடல் உற்ஸவம், ஊஞ்சல் உற்ஸவம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பூஜை, விழா என வில்லியனூரே களை கட்டும் என்று பெருமையுடன் சொல்கிறார்கள் ஊர்மக்கள். அம்மனுக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், விழாவின்போது அலகு குத்திக் கொண்டு, நான்கு வீதிகளையும் வலம் வந்து, அம்மனைத் தரிசித்து, தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். இந்த வருடம், 85-வது செடல் உற்ஸவ விழா நடைபெறுகிறது.

வடக்கு நோக்கிய நிலையில் காட்சி தருகிறாள் அம்மன். திருமண பாக்கியம், குழந்தை வரம், கடன் தொல்லையில் இருந்து மீள்தல், கணவன்- மனைவி பிரியாதிருத்தல் என சகல வரங்களையும் தந்தருளும் வரப்பிரசாதி என இந்த ஏழை மாரியம்மனைப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

திருமணத் தடை உள்ளவர்கள், அம்மனுக்கு மஞ்சள் கயிறு (சரடு) கட்டி வேண்டுகின்றனர். பிள்ளை பாக்கியம் வேண்டுவோர், அம்மனின் மடியில் வைத்து பூஜித்த பழங்களை பிரசாதமாகச் சாப்பிடுகின்றனர். தவிர, அம்மனின் சந்நிதி முன்னே வந்து மனதார வேண்டினால், தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்! நோய் தீர்ந்தவர்கள் நேர்த்திக் கடனாக அம்மனுக்குப் புடவை சார்த்தி வழிபடுகின்றனர்.

Leave a Reply