திமுக எம்.எல்.ஏக்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்த தேமுதிக, மற்றும் இடது சாரிகளின் கோரிக்கையை சபாநாயகர் பி.தனபால் நிராகரித்துவிட்டார். இதனால் திமுக எம்.எல்.ஏக்களின் சஸ்பெண்ட் நீடிக்கும் நிலை உள்ளது.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம், கவன ஈர்ப்புத் தீர்மானம் ஆகிய முக்கிய அலுவல்கள் முடிவடைந்ததும் தேமுதிக, மார்க்சிஸ்ட் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் எழுந்து, திமுக உறுப்பினர்கள் மேல் விதிக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற்று அவர்கள் கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் பேசியதாவது:
சட்டப்பேரவையில் கடந்த 22 ஆம் தேதியன்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசிக் கொண்டிருந்தபோது அவர் தெரிவித்த கருத்தையடுத்து பேரவைத் தலைவரையும், என்னையும் (ஓ.பன்னீர்செல்வம்) பேச விடாமல் அச்சுறுத்தும் வகையில் திமுகவினர் செயல்பட்டனர். அவைத் தலைவரை கைநீட்டிப் பேசியதோடு அவரது இருக்கைக்கு அருகில் தரையில் அமர்ந்து தர்னா செய்து கொண்டு திட்டமிட்டு அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்பட்டனர்.
பேரவைக் கூட்டத் தொடரில் நான்காவது முறையாக வெளியேற்றப்பட்ட நிலையில், அவையின் எஞ்சிய நாள்களுக்கு அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள இயலாது என பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார். திமுக எம்.எல்.ஏ.க்களின் செயல்களுக்கு துணை போகின்ற வகையில் கோரிக்கைகளை வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்பதை பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கூறினார்.
அதன்பின்னர் இந்த கோரிக்கைக்கு விளக்கம் அளித்த சபாநாயகர், “”சம்பவத்தன்று என்னுடைய இருக்கைக்கு அருகில் வந்து கையை நீட்டி, குரல் எழுப்புவது என்பதை ஏற்றுக் கொள்ள இயலாத நிலையில், என்னையும் மதிக்காமல் அவர்களுடைய கட்சித் தலைமைக்கும் கட்டுப்படாத காரணத்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன்” என்றார்.
சபாநாயகரின் விளக்கத்தைத் தொடர்ந்து தேமுதிக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.