பிரதமர் மோடி அமைச்சரவையில் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருக்கும் நிதின் கட்காரி வீட்டில் படுக்கையறை உள்பட பல இடங்களில் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டதாக வந்த தகவலை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்காரியின் வீட்டில் அதிநவீன உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.படுக்கையறை உள்பட வீட்டின் பல பகுதிகளில் மறைவாக பொருத்தப்பட்டிருந்த இந்த உளவு பார்க்கும் கருவிகளை தற்செயலாக கண்டுபிடித்ததாகவும், அவற்றை உடனடியாக துண்டிக்க அமைச்சர் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த அதிநவீன உளவு பார்க்கும் கருவிகளை அமெரிக்காவின் சி.ஐ.ஏ பொருத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகை உலகின் பல நாடுகளின் முக்கிய தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டு வருவதாக, செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும் இதுமாதிரியான உளவு பார்க்கும் கருவிகள் பிரதமர் வீடு உள்பட வேறு தலைவர்களின் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ளதா என்பது கண்டுபிடிக்க இந்திய உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தனது வீட்டில் உளவு பார்க்கும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை நிதின் கட்காரி மறுத்துள்ளார். இவை ஊகத்தின் அடிப்படையில் வெளியான தகவல்கள் என அவர் கூறியுள்ளார்.