மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி வீட்டின் படுக்கையறையில் உளவுபார்க்கும் கருவி பொருத்தப்பட்டதாக நேற்று வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மற்றும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர்களின் வீடுகளிலும் உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக வட இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி இதுகுறித்து கருத்து கூறியபோது, “பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும் என ஒரு வருடத்திற்கு முன்பே ஊகம் செய்த அமெரிக்கா, அப்போதே இதுமாதிரியான உளவு பார்க்கும் கருவியை பொருத்தியுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் இந்த செய்தியை நிதின் கட்காரி உறுதியாக மறுத்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நிதின்கட்காரி, ““எனது வீட்டில் உளவு பார்க்கும் கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை. அவை ஊகமான தகவல்கள் என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன். இப்போதும் அதையேதான் கூற விரும்புகிறேன்“ என்று கூறியுள்ளார்.
ஆனால் ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் இந்த செய்தி குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். பாஜகவின் செய்திதொடர்பாளர் நளின் கோக்லி அவர்கள் “”கடந்த வருடமே நாட்டில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும் என்று நம்பப்பட்டது. எனவே தகவல் சேகரிக்கும் ஆர்வம் இருந்தது என்றால் இது ஆச்சரியமானது இல்லை. ஆனால் உளவு சாதனங்கள் வைத்து ஒட்டுகேட்பு என்பது சரியானது இல்லை.” என்று அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.