தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீவிபத்தின் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 94 பிஞ்சு குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தார்கள். பள்ளியின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் உள்ளே சிக்கிய மாணவ மாணவிகள் வெளியேற முடியாமல் உடல்கருகி பலியாகினர். இந்த விபத்தில் 18 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்து பின்னர் உயிர் பிழைத்தனர்.
இந்த தீவிபத்து குறித்து விசாரணை நடத்திய கும்பகோணம் போலீஸார், பள்ளியில் போதிய வசதியின்றி குறுகிய இடத்தில் மூன்று பள்ளிகளை நடத்திய பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமி, ள்ளி தாளாளரான அவரது மனைவி சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி உள்பட மொத்தம் 24 பேர்களை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 24 பேர்கள் மீதும் 304 (கொலைக்கு இணையான மரணத்தை ஏற்படுத்துதல்), 120பி (சதிச்செயல்), 338 (உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கொடுங்காயங்கள் ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது
கடந்த பத்து வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்படவிருக்கின்றது. இந்த தீர்ப்பை அறிய இறந்த மாணவர்களின் பெற்றோர்களும் நீதிமன்றத்திற்கு வருவார்கள் என எதிர்பார்ப்பு உள்ளதால் கும்பகோண நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.