புனே நகரில் இன்று நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி 15 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பயங்கர பெய்து வருகிறது. நேற்று பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மேடான பகுதிக்கு மாற்றப்பட்டனர்.
தானே மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சுமார் 50 கிராமங்களை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. விவசாய பயிர்கள் அனைத்தும் அடியோடு நாசமாகிவிட்டதால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பயிர்கள் சேதமடைந்தன.
தானே மாவட்டத்தில் உள்ள வசாய் என்ற பகுதியின் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்நிலையில் புனே மாவட்டம் அம்பே என்ற சிறிய கிராமத்தில் இன்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 15 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த பயங்கர நிலச்சரிவில் சுமார் 40 வீடுகள் வரை சேற்றில் புதைந்ததாகவும், அதில் சுமர் 150 பேர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அந்த பகுதியில் உள்ள பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக அந்த பகுதியினர் கடும் அச்சத்துடன் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புப்படை வீரர்களும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை நோக்கி விரைந்து சென்றுள்ளனர்.
புனே நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை உடனடியாக மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அந்த பகுதியில் ரெயில் தண்டவாளங்களும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.