சபாநாயகரை சர்வாதிகாரி என்று கூறிய மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு.

jayalalitha and stallinதி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனும், திமுகவின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின் மீது ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ”கடந்த 22 ஆம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட தி.மு.க. பொருளாளரும், எம்.எல்.ஏ.வுமான மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” நாங்கள் (தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்) சட்டமன்றத்திற்கு வருவது முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள் ஆகியோருக்கு பிடிக்கவில்லை. மேலும் சபாநாயகர் சர்வாதிகாரியாக நடந்துகொள்கிறார்” என்று கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் கூறிய இந்த குற்றச்சாட்டு, உள்நோக்கமானது மட்டுமின்றி அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.