விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வரும் தீபாவளி தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ள கத்தி திரைப்படத்தை பிரச்சனையின்றி ரிலீஸ் செய்ய கத்தி படக்குழுவினர் முன்னேற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் நட்புறவு கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதிக்க வேண்டும் என மாணவர் அமைப்பு ஒன்று பிலிம் சேம்பரில் மனு கொடுத்திருக்கிறாது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணா மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் நேற்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
மேலும் இருவரும் விரைவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மற்றும் நெடுமாறன் ஆகியோர்களையும் சந்திக்க உள்ளனர். தீபாவளி அன்று எவ்வித பிரச்சனையும் இன்றி ‘கத்தி’ திரைப்படம் திரையிட படக்குழுவினர் இப்போதில் இருந்தே முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் கத்தி படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர் அமைப்பினர் உறுதியாக இருக்கின்றனர். இவர்களுக்கு பின்புலமாக ஒரு மிகப்பெரிய சக்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே தமிழின விரோதியின் தயாரிப்பில் நடிக்கும் விஜய்யை நாட்டை விட்டே துரத்துவோம் என மாணவர் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் சற்றுமுன் ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்டுள்ளதால் சமூக இணையதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.