தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக விமர்சித்து செய்தி வெளியிட்டிருந்த இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்த விஜயலட்சுமி என்ற பெண்ணுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆறுதல் கடிதம் எழுதியுள்ளார்.
மனிதர்களாக பிறந்த அனைவரும் வாழ்ந்து சாதிக்க வேண்டும் என்றும், சாதிப்பவர்களுக்கு துணையாக நிற்கவேண்டும் என்றும் கோழைத்தனமாக தற்கொலை செய்யாமல் புத்திசாலித்தனமாக வாழ்ந்து காட்டுபவர்கள் மட்டுமே மனிதர்கள் என்று விஜயலட்சுமிக்கு தனது கடிதத்தின் மூலம் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
விஜயலட்சுமிக்கு ஜெயலலிதா எழுதிய கட்டுரையின் முழு விபரம்:”
”தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக நான் அவ்வப்போது குரல் கொடுத்து கொண்டு வருவதை கொச்சைப்படுத்தி இலங்கை நாட்டின் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த அவதூறு கட்டுரை பற்றிய செய்தி அறிந்து, மனமுடைந்து, தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு தாங்கள் முயற்சி செய்துள்ளீர்கள் என்ற செய்தி என்னை மிகவும் வருத்தம் அடையச் செய்துள்ளது. ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் அவ்வையார்.
இயற்கையின் பரிணாமத்தில் மனித இனம் வியப்பிற்குரியது. மனித உயிர் விலை மதிப்பற்றது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த உயிரை, எக்காரணம் கொண்டும் உணர்ச்சி வசப்பட்டு மாய்த்துக்கொள்ளும் செயலில் இனி ஈடுபட வேண்டாம் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழுக்காக, தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக தொடர்ந்து குரல் கொடுப்பது, அதனால் ஏற்படும் துன்பங்களை சகித்து கொண்டு கடுமையாய் செயலாற்றுவது, அறவழியில் போராடுவது போன்றவற்றை தளராது மேற்கொள்வதன் வாயிலாக எதையும் சாதிக்க முடியும், எதிலும் வெற்றி பெற முடியும் என்பதில் எனக்கு அபார நம்பிக்கை இருக்கிறது.
இதே நம்பிக்கையுடன் தாங்கள் வாழ வேண்டும், வாழ்ந்து சாதிக்க வேண்டும், சாதிப்பவர்களுக்கு துணை நிற்க வேண்டும். தற்கொலை கோழைத்தனம், வாழ்ந்து சாதிப்பது புத்திசாலித்தனம் என்பதை புரிந்து கொண்டு, ‘வாழ்ந்து காட்டுபவர்கள் மட்டுமே மனிதர்கள்’ என்பதற்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்”