பாலியல் குறித்த புகார்களை விசாரணை செய்து தீர்ப்பு வழங்கும் பெண் நீதிபதி ஒருவருக்கு சக நீதிபதி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 வருடங்களாக பிரபல வழக்கறிஞராக இருந்து பின்னர் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் நீதிபதி. அந்த பெண் நீதிபதிக்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஒரு நீதிபதி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தனது வீட்டிற்கு தனிமையில் வந்து ஆபாச பாடல்களுக்கு நடனம் ஆடும்படி வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு அந்த பெண் நீதிபதி உடன்படாததால், அவருக்கு அதிக வேலை நேரத்தையும், மன அழுத்தத்தையும் கொடுத்துள்ளார் அந்த உயர்நீதிமன்ற நீதிபதி. இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளான அந்த பெண் நீதிபதி வேறு வழியின்றி ராஜினாமா செய்துள்ளார். மேலும் இதுகுறித்து புகார் ஒன்றினை தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல்.தத்து, டி.எஸ்.தாக்கூர், அனில் ஆர்.தவே, தீபக் மிஸ்ரா மற்றும் அனில் மிஸ்ரா ஆகியோருக்கும் மத்தியப்பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அப்பெண் நீதிபதி கடிதம் எழுதியுள்ளார்.
பெண் நீதிபதியின் புகாரினை பரிசீலனை செய்த தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, அவருடைய புகாரில் உண்மை இருந்தால் கண்டிப்பாக சம்மந்தப்பட்ட நீதிபதி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.