நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தை தொடர்ந்து, பேசிய திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுதீப் பந்தோபாத்யா, இந்திய பிரதமர் மோடி நேபாள பயணத்தின்போது, பசுபதிநாதர் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். அதைப் பாராட்டுகிறோம். ஆனால் அதே நேரத்தில் அவர் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் ரம்ஜான் வாழ்த்து ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மக்களவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
இதற்கு பதில் அளித்து பேசிய நாடாளுமன்ற விவகார மந்திரி வெங்கையா நாயுடு, “பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதத்தினரையும் சமமாக மதிப்பவர்கள் என்றும் ரம்ஜான் பண்டிகைக்காக பிரதமர் முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்றும் கூறினார். ஆனால் வெங்கையா நாயுடுவின் கருத்தை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மக்களவையில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இதன்பின்னர் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி “பிரதமர் இந்து கோவிலுக்கு சென்றுவருவது எந்த வகையிலும் ஆட்சேபனைக்குரியது அல்ல. ஆயினும் பிரதமர் என்பவர் நாட்டிற்கு பொதுவானவர். அவர் கண்டிப்பாக இப்தார் விருந்து வைத்திருக்க வேண்டும். இந்த பாரம்பரியத்தை தவறிய மோடி பிரதமராக இருக்க தகுதியில்லாதவர்” என்று பேசினார். இதனால் அவையில் மீண்டும் அமளி ஏற்பட்டது.