உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசி நகரம் அருகே உள்ள கங்கையாற்றில் 42 பேர் வரை சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில், 20 பேர் வரை காணவில்லை என்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படகில் சென்ற 42 பேர்களும் கூலி வேலை செய்துவிட்டு வீடு திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கங்கையாற்றில் உள்ள ரோஹனியா என்ற பகுதியில் 42 பேர்களுடன் சென்ற படகு ஒன்று, அந்த பகுதியில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் திடீரென நிலைகுலைந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் 22 பேர் நீந்தி கரை சேர்ந்துவிட்டதாகவும், மீதி 20 பேர் கங்கையாற்றின் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர், இரண்டு மோட்டார் படகுகளில் சென்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 20 பேர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். விபத்து நடந்த தொகுதி பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதி என்பதால் பரபரப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டவர்கள் பத்திரமாக கரை சேர இறைவனை பிரார்த்திப்பதாக கூறப்பட்டுள்ளது.