இதுவரை யார் வேண்டுமானாலும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று வரக்கூடிய நிலை இருந்தது. ஆனால் இனி அடையாள அட்டையின்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குள் நுழைய முடியாது என மருத்துவமனை நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், நர்ஸ்கள். மருத்துவப் பணியாளர்கள், பிற பணியாளர்கள், மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் என அனைவரும் மருத்துவமனைக்குள் நுழையும்போது தங்களது அடையாள அட்டைகளை கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். அடையாள அட்டையின்றி வரும் ஊழியர்கள் யாராக இருந்தாலும் அனுமதிக்கப்படமாட்டார்கள். அடையாள அட்டை இல்லாதவர்கள் நிலைய மருத்துவ அதிகாரியிடம் சென்று நுழைவுச் சீட்டு பெற்று அதன்பின்னர் உள்ளே வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் தனித்தனியாக நுழைவுச்சீட்டுக்கள் வழங்கப்படும். நுழைவு சீட்டு இல்லாத நோயாளிகளும் பார்வையாளர்களும் வார்டுகளுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதற்கான உத்தரவை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அழ.மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் அழ.மீனாட்சி சுந்தரம் செய்தியாளர்களிடம் நேற்று கூறியபோது,
மருத்துவமனைக்குள் நுழைய அடையாள அட்டை அவசியம். அதேபோன்று உள்நோயாளிகளின் பார்வையாளர்கள், உடனிருப்போருக்கும் நுழைவுச்சீட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மருத்துவமனைக்குள் நுழைவோரைக் கட்டுப்படுத்தும்போது திருட்டு சம்பவங்கள், குற்றச் சம்பவங்கள் போன்றவை குறையும்.
மேலும், தேவையில்லாத மக்கள் கூட்டம் மருத்துவமனைக்குள் வருவதும் குறையும். ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.