பாரத ரத்னா விருதை ஏற்க மாட்டோம். நேதாஜி குடும்பத்தினர் அதிரடி முடிவு.

nethajiமுன்னாள் பிரதமர் வாஜ்பாய், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உள்பட ஐந்து பேர்களுக்கு இவ்வருடம் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில் நேதாஜியின் குடும்பத்தினர் பாரத ரத்னா விருதை நேதாஜிக்கு கொடுத்தால் அதை வாங்க மாட்டோம் என அறிவித்துள்ளனர். நேதாஜி காணாமல் போனது குறித்த மர்மம் இன்னும் விலகாத நிலையில் அவருக்கு விருது கொடுத்தால் அதை ஏற்கும் மனநிலையில் தாங்கள் இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பேரன் சந்திரகுமார் கூறியதாவது:

எனது தாத்தா சுபாஷ் சந்திர போஸ் கடந்த 1945ஆம் ஆண்டில் மர்மமான முறையில் காணாமல் போனார். அவரது உடலைக்கூட கண்டுபிடிக்க முடியாமல் அவர் இறந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது. அவர் உயிரிழந்தார் என்றால் எப்போது எந்த இடத்தில் உயிரிழந்தார் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். அதன்பின்னர்தான் நாங்கள் பாரத ரத்னா விருதை பெற்றுக்கொள்வோம். அவர் உயிரிழந்ததற்கான ஆதாரம் எங்களுக்கு வேண்டும்.

பாரத ரத்னா விருதை கொடுத்து நேதாஜிக்கு பெருமை சேர்க்க விரும்பினால், அவரின் உயிரிழப்பு குறித்த அரசு ஆவணங்கள் மீண்டும் வகைப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் அவர் காணாமல் போனதன் மர்மம் வெளிவரும்.

எங்கள் குடும்பத்தை சேர்ந்த 60 பேர்களும் பாரத ரத்னா விருதை ஏற்க தயாராக இல்லை.அவரது மரணத்தின் மர்மத்தை கண்டுபிடித்து தரும்வரை அவருக்கு வழங்கப்படும் எந்த விருதையும் எங்கள் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.

Leave a Reply