மக்களவை துணை சபாநாயகராக அதிமுக எம்பி தம்பிதுரை போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட தம்பிதுரைக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்களவை துணை சபாநாயகர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் தம்பிதுரை மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் உட்பட மற்ற எதிர்க்கட்சிகள் சார்பில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தம்பித்துரையின் வேட்பு மனுவை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் முன்மொழிந்தனர். மேலும், காங்கிரஸ் கட்சியும் தம்பித்துரைக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளது.
இதனால் போட்டியின்றி மக்களவை துணை சபாநாயகராக தம்பிதுரை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மக்களவையில் அறிவிக்கப்பட்டது.
அதிமுக எம்.பி. தம்பிதுரை, ஏற்கனவே கடந்த 1985 முதல் 1989ஆம் ஆண்டு வரை மக்களவை துணை சபாநாயகராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவை சபாநாயகர் இல்லாத நேரங்களில் சபையை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு துணை சபாநாயகருக்கு மிகவும் முக்கியமானதாகும்.
நாடாளுமன்றத்தில் துணைத் தலைவருக்கென தனி அலுவலகம் உண்டு. சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்யலாம். அவருக்கென ஒரு அதிகாரி மற்றும் ஐந்து அலுவலர்களை பணி அமர்த்திக் கொள்ளலாம். மேலும், தனி பாதுகாப்பு அதிகாரி எப்போதும் உடன் இருப்பார்.