விஜய், சமந்தா நடித்த ‘கத்தி’ திரைப்படம் முடிவடையும் நிலையில் இருக்கின்றது. வரும் தீபாவளி திருநாளில் கத்தியை ரிலீஸ் செய்துவிட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தீவிரமாக முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் கத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர் லைகா நிறுவனர், ராஜபக்சேவுக்கு நண்பர் என்ற காரணத்தால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மாணவர் அமைப்பு ஒன்று போராடி வருகிறது. இன்னும் இரண்டொரு நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர் அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், முள்ளை முள்ளால் எடுப்பது போல மாணவர் அமைப்பின் எதிர்ப்பை, மாணவர்களை கொண்டே சரிசெய்ய விஜய் தீவிர ஏற்பாடு செய்து வருவதாக கோலிவுட்டில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
விஜய்க்கு இளையதலைமுறையினர் குறிப்பாக மாணவர்கள் அதிகளவு ரசிகர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் கத்தி படம் குறித்து பாஸிட்டிவ்வான கருத்துக்களை மாணவர்கள் மூலம் பரப்புவதற்கும், இந்த படத்தை எதிர்க்கும் மாணவர் அமைப்பை கட்டுப்படுத்தவும் காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றனர். இதற்காக ரசிகர் மன்றத்தில் இருந்து ஒரு டீம், களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளது. அந்த டீமுக்கு கணிசமான அளவில் பணமும் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
விஜய், இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக பல்வேறு காலகட்டத்தில் குரல் கொடுத்தது, தமிழக முதல்வர் குறித்து அவதூறான கருத்து இலங்கை இணையதளத்தில் வெளியானபோது முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்தது போன்றவற்றை மாணவர்களிடையே பரப்பி மாணவர்கள் மத்தியில் கத்திக்கு ஆதரவு திரட்ட இந்த டீம் வேலை செய்து வருகிறது. இதன் ரிசல்ட் என்னவென்பதை இன்னும் சில நாட்களில் தெரிந்துகொள்ளலாம்.