உத்தரகாண்ட் மாநிலத்தில் பயங்கர வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் இதுவரை சுமார் 52 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பத்து நாட்களாக கனமழை பெய்து வரும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கேத்வார் என்ற பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த பொதுமக்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், கயிறு கட்டி மீட்டனர். மேலும் நிலச்சரிவுகளில் சிக்கிய இரண்டு பேர்களை அவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடும் நிலச்சரிவு காரணமாக பௌரி கார்வால் என்ற பகுதியில் சிக்கியிருந்த சுற்றுலாப்பயணிகளை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்க உத்தரகாண்ட் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கங்கை ஆற்றில் நீர் மட்டம் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதால் ஹரித்துவார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அவர்கள் தாழ்வான பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பக்ரைய்ச் மற்றும் லக்மிபூர் மாவட்டத்தில் சுமார் 300 பேர்களை காணவில்லை என்றும், அவர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.