ஆகஸ்ட் 29ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல். 7வது முறையாக ஜெயலலிதா வெற்றி பெறுவாரா?

jayalalitha-winஅதிமுக கட்சியின் பொதுச்செயலாலர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்பு மனு தாக்கல் இன்று காலை 9 மணி முதல் தொடங்குகிறது என்றும் அதிமுக தலைமை கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த தேர்தலுக்கு ஆணையராக  கட்சியின் அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் அவரிடம் மனுதாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 24 பிற்பகல் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடைபெறுவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் மனுக்களை திரும்பப் பெறுவதற்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதி கடைசி தேதி என்றும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக மீண்டும் ஜெயலலிதாவை தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்து ஏராளமான கட்சி நிர்வாகிகளும், முக்கியப் பிரமுகர்களும் மனு செய்ய முடிவு செய்துள்ளனர். எனவே தற்போதைய பொதுச்செயலாளர் ஜெயலலிதாவே மீண்டும் போட்டியின்றி தேர்வுச் செய்யப்பட உள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

அதிமுகவை தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டு பின்னர் ஜெயலலிதாவின் தீவிர முயற்சியால் 1989-ஆம் ஆண்டு மீண்டும் ஒன்றுபட்ட கட்சியாக உருவெடுத்தது. அதுமுதல் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவே இதுவரை  தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை ஜெயலலிதா ஆறு முறை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது ஏழாவது முறையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply