உலக அளவில் பிரபலமான யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்கார் உடல்நலக்கோளாறு காரணமாக இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
96 வயதான யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்கார் அவர்களுக்கு நேற்று இரவு திடீரென இதய மற்றும் சுவாச கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அவர் நேற்று தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், ஐயங்கார் இன்று அதிகாலை 3.15 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
யோகாகுரு பி.கே.எஸ்.ஐயங்கார், கடந்த 1991 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், 2002 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், இந்த ஆண்டு பத்ம விபூஷன் விருதும் பெற்றுள்ளார். மேலும், அவர் யோகா கலை பற்றி ஏராளமான புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
பி.கே.எஸ்.ஐயங்கார் மறைவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். யோகாச்சார்யா பி.கே.எஸ்.ஐயங்கார் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். உலகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.