தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விலை இன்று முதல் உயர்த்தப்படுகிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு மாநில வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழக சட்டசபையில் கடந்த 11-ந்தேதி மதுபான விலையுயர்வு குறித்த சட்ட திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்படும் ஆயத்தீர்வையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், 29-11-2003 முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் சில்லறை விலையில் விற்கப்பட்டு வருகின்றன. இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு, ஒரு புரூப் லிட்டருக்கு ரூ.93 ஆயத்தீர்வை வசூலிக்கப்பட்டது. பின்னர், கடந்த 2007-ம் ஆண்டு அது ரூ.125 ஆக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு பின்னர் அரசின் வருவாயை உயர்த்தும் பொருட்டு, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயத்தீர்வையை 3 அடுக்காக பிரித்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை புரூப் லிட்டர் ஒன்றுக்கு ரூ.125 ஆக இருந்த ஆயத்தீர்வை, இனி சாதாரண வகைகளுக்கு ரூ.250 ஆகவும், நடுத்தர வகைகளுக்கு ரூ.300 ஆகவும், உயர்தர வகைகளுக்கு ரூ.500 ஆகவும் உயர்த்தப்படுகிறது. இந்த விலையுயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக ரூ.2,500 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இந்த புதிய விலை மாற்றத்தின்படி இன்று முதல் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களின் விலை விபரம்:
சாதாரண ரகம் குவார்ட்டர் பாட்டில் (180 மி.லி): முந்தைய விலை ரூ.70. புதிய விலை ரூ.80
சாதாரண ரகம் ஆப் பாட்டில் (375 மி.லி) முந்தைய விலை ரு.140. புதிய விலை ரூ.160
சாதாரண ரகம் புல் பாட்டில் (750 மி.லி) முந்தைய விலை ரூ.280 புதிய விலை ரூ.320
நடுத்தர ரகம் குவார்ட்டர் பாட்டில் (180 மி.லி): முந்தைய விலை ரூ80. புதிய விலை ரூ.90
நடுத்தர ரகம் ஆப் பாட்டில் (375 மி.லி) முந்தைய விலை ரு.160. புதிய விலை ரூ.180
நடுத்தர ரகம் புல் பாட்டில் (750 மி.லி) முந்தைய விலை ரூ.320 புதிய விலை ரூ.360
உயர் ரகம் குவார்ட்டர் பாட்டில் (180 மி.லி): முந்தைய விலை ரூ90. புதிய விலை ரூ.110
உயர் ரகம் ஆப் பாட்டில் (375 மி.லி) முந்தைய விலை ரு.180. புதிய விலை ரூ.220
உயர் ரகம் புல் பாட்டில் (750 மி.லி) முந்தைய விலை ரூ.360 புதிய விலை ரூ440