விஜய்,சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் “கத்தி” படத்திற்கு ரிலீஸ் ஆகும் முன்னரே பயங்கர எதிர்ப்பு நிலவுவதால் இந்த படத்தின் தயாரிப்பாளர் படத்தை கைமாற்ற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருங்கிய நண்பரான லைகா புரடொக்ஷன் நிறுவனர் ஏ.சுபாஷ்கரன் மற்றும் கருணாமூர்த்தி ஆகியோர் தயாரித்திருக்கும் ‘கத்தி’ படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என தமிழ் அமைப்புகளும், மாணவர்கள் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பிரச்சனையை சுமூகமாக முடிக்க தற்போது படத்தின் நாயகன் விஜய் நேரடியாக களமிறங்கியுள்ளார்.
இந்த படத்தில் ஏற்பட்டுள்ள ஒரே பிரச்சனை தயாரிப்பாளர் என்பதால் தயாரிப்பாளரிடம் பேசி படத்தை வேறொரு தயாரிப்பாளரிடம் கைமாற்றும்படி விஜய் ஏ.ஆர்.முருகதாஸிடம் ஆலோசனை கூறியிருப்பதாகவும், வேறு தயாரிப்பாளர் இந்த படத்தை விலைக்கு வாங்கிக்கொள்ள தயங்கினால், தானே சொந்தமாக படத்தை வாங்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் முருகதாஸிடம் கூறியதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.
எனவே விரைவில் லைகா நிறுவனர் பத்திரிகையாளர்களை அழைத்து, தங்கள் நிறுவனம் “கத்தி” படத்தில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக அறிவிப்பார் என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர். மேலும் கத்தியை வேறு யாரும் விலைக்கு வாங்க தயங்கினால், விஜய் மற்றும் முருகதாஸ் இணைந்தே படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பை இன்னும் சில நாட்களில் வெளிவரும் என செய்திகள் கூறுகின்றன. கத்தி படத்தின் பிரச்சனையை வைத்து சுயவிளம்பரம் தேட முயற்சித்த ஒருசில அமைப்புகள் விஜய்யே நேரடியாக களத்தில் இறங்கியதால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிகிறது.