மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக தான் நியமிக்கப்பட்டதற்கு மதுரை கீழ் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை நேற்று மதுரை உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது. இதனால் நித்தியானந்தாவின் இளைய மடாதிபதி பதவி பறிபோகிறது.
தற்போது மதுரை ஆதீனமாக பதவி வகித்து வரும் அருணகிரிநாதர், அந்த மடத்தின் 293வது இளைய மடாதிபதியாக நித்தியானந்தாவை கடந்த 22.4.2012 அன்று நியமனம் செய்தார். இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. மதுரை ஆதினம் தன்னிச்சையாக இளைய மடாதிபதி பதவியை நித்தியானந்தாவிற்கு வழங்கியுள்ளதாகவும், மதுரை ஆதீன மடத்தின் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இந்து அறநிலையத்துறை ஆணையர், மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், ஆதீன மடத்திற்குள் நுழைய நித்தியானந்தாவிற்குதடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த மதுரை நீதிமன்றம் இந்த வழக்கு முடிவடையும் வரை மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடை விதித்து 26.2.2013 அன்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நித்தியானந்தா மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார். ஆனால் உயர்நீதிமன்றத்தில் “மதுரை ஆதீன மடத்தின் ஆவணங்களை பார்க்கும் போது, ஒரு மடாதிபதி உயிருடன் இருக்கும்போது இன்னொருவரை மடாதிபதியாக நியமிக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதேபோன்று மடாதிபதியாக நியமிக்கப்படுபவர் என்னென்ன தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்பதும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை நித்தியானந்தா பூர்த்தி செய்யவில்லை.
நித்தியானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்து பிறப்பித்த உத்தரவை அருணகிரிநாதர் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அது தொடர்பான வழக்கு தனியாக உள்ளது. எனவே, கீழ்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. கீழ்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானது தான்” என்று கூறி நித்தியானந்தா மனுவை தள்ளுபடி செய்தார்.