மதுக்கடைகளுக்கு ஞாயிறு விடுமுறை. 700 மதுக்கடைகள் மூட உத்தரவு. கேரள முதல்வர் அதிரடி

kerala winshopsகேரளாவில் உள்ள 700 மதுக்கடைகளை மூடவும், ஞாயிறு அன்று மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கவும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி அதிரடியாக முடிவு எடுத்துள்ளார். கேரளாவில் மதுவிற்பனையை குறைக்கும் நோக்கத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் படிப்படியாக மதுவை ஒழிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த முதல்வர் உம்மன்சாண்டி, அதன் முதல்கட்டமாக மதுக்கடைகளின் விடுமுறை நாட்களை அதிகப்படுத்தியுள்ளார். மாதத்தின் முதல் நாள், ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கூறிய முதல்வர் ஒவ்வொரு ஆண்டும் மொத்த மதுக்கடைகளில் 10% மதுக்கடைகளை மூட அமைச்சரவை முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் மதுக்கடைகள் மூலம் வரும் வருமானத்தின் ஒரு பகுதியை மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காக செலவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். விரைவில் கேரளா மதுவில்லா மாநிலமாக உருவெடுக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், அந்த விருப்பம் கூடியவிரைவில் நனவாகும் என்றும் கூறினார்.

Leave a Reply