ஆன்லைன் மூலம் கோ ஆப்டெக்ஸ் விற்பனை. அமைச்சர் கோகுல இந்திரா தகவல்

 cooptex_1923158hகோ-ஆப்டெக்ஸ் உடைகளை இண்டர்நெட்டில் ஆன்-லைன் மூலம் விற்பனை செய்யும் திட்டம் அதிவிரைவில் தொடங்கப்படும் என தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா நேற்று கூறினார்.

சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையத்தின் திறப்பு விழா நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. இந்த விற்பனை நிலையத்தை அமைச்சர் கோகுல இந்திரா திறந்து வைக்க, முதல் விற்பனையை சென்னை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் கோகுல இந்திரா, “இந்திய கைத்தறி நிறுவனங்களில் முதன்மையானதாக திகழும் கோ-ஆப்டெக்ஸ், இன்று தனது 197-வது விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் கோ ஆப்டெக்ஸ் மூலம் ரூ.301.44 கோடிக்கு விற்பனையானது. அந்த விற்பனை நடப்பு ஆண்டில் ரூ.500 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும்  நடப்பு ஆண்டில் பண்டிகை தினங்களை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் பல்வேறு புதிய ரக சேலைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. குறிப்பாக பரம்பரா பட்டு, கோலம் பட்டு, வரலாற்று பட்டு, மென் பட்டு, பட்டு பூச்சிகளை அழிக்காத வகையில் தயாரிக்கப்பட்ட அஹிம்சா பட்டு, பருத்தி சேலைகள் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கோ ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர்களை கவர ‘இ-ஷாப்பிங்’ என்ற முறையில் ஆன்லைனில் விற்பனை செய்யும் திட்டத்தை கோ-ஆப்டெக்ஸ் அதிவிரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்-லைனில் தங்களுக்கு பிடித்த கோ-ஆப்டெக்ஸ் ஜவுளிகளை வாங்கலாம். மேலும் தங்களுக்கு தேவையான புடவை டிசைன்களை ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தால், அதே டிசைன்களில் புடவைகளை தயாரித்து அளிக்கவும் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் கோகுல இந்திரா பேசினார்.

Leave a Reply