சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் இணை வேந்தராகவும், முன்னாள் எம்.பியாகவும் இருந்த தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம் ராமசாமி நேற்று சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலை சி.பி.ஐ அதிகாரிகள் மறுத்துள்ளனர். அவர் மீது லஞ்சம் கொடுத்தாக வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது என்றும், இந்த வழக்கு தொடர்பாக மனுநீதி சோழன் என்பவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.
தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி, புதிய கம்பெனி ஒன்று தொடங்குவதற்காக கம்பெனிகள் பதிவாளராக பணிபுரிந்த மனுநீதி சோழன் என்ற அதிகாரிக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து இதுகுறித்து விசாரணை செய்ய சிபிஐ முடிவு செய்தது.
பின்னர் சி.பி.ஐ அதிகாரிகள் செய்த விசாரணையின் பேரில் மனுநீதி சோழன் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். அவரிடம் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தொழிலதிபர் ராமசாமியும் கைது செய்யப்பட்டதாக நேற்று மாலை முதல் தகவல் வெளிவந்து கொண்டிருப்பதாகவும், அவர் மீது வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்யவில்லை என்றும், கூறிய சி.பி.ஐ. அதிகாரிகள், தேவைப்பட்டால் அவரையும் கைத் செய்வோம் என்றும் கூறினர்